கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை; நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 8 பேருக்கு பாராட்டு
கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை; நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 8 பேருக்கு பாராட்டு
கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை; நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 8 பேருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 18, 2025 10:54 AM

கோவை: கோவை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர், இலவச பயற்சி பெற்று இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் 8 பேரை கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.
கோவை மாவட்டம், சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், நீட் தேர்விற்கான இலவச பயிற்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 158 பேர் பயிற்சி பெற்றனர். அவர்களில் 43 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில், முதல் முயற்சியில் ஆறு பேரும், இரண்டாவது முயற்சியில் இரண்டு பேரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகள் 7 பேர், மாணவர் ஒருவர்.
இவர்களை பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் பாராட்டினார். சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முத்துராணியை கலெக்டர் பவன்குமார், கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, எம்.பி., கணபதி பி.ராஜ்குமார் ஆகியோர் கவுரவித்தனர்.
அதேபோல், வடக்கு கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அபிநந்தா மற்றும் சாதனா, மேற்கு மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த ஜி.வித்யாஸ்ரீ, எஸ்.ஆதிஷா மற்றும் ஜனனி,
ஒப்பணக்கார தெருவில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நவ்பியா; மற்றும் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஞானேஸ்வரி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
200க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற எட்டு மாணவர்களில் நான்கு பேர் 7.5% ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.