Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நடிகர் ரவிச்சந்திரனுக்கு இறுதி அஞ்சலி : ஜெ., இரங்கல்

நடிகர் ரவிச்சந்திரனுக்கு இறுதி அஞ்சலி : ஜெ., இரங்கல்

நடிகர் ரவிச்சந்திரனுக்கு இறுதி அஞ்சலி : ஜெ., இரங்கல்

நடிகர் ரவிச்சந்திரனுக்கு இறுதி அஞ்சலி : ஜெ., இரங்கல்

ADDED : ஜூலை 27, 2011 12:52 AM


Google News
சென்னை : நடிகர் ரவிச்சந்திரனின் மறைவுக்கு, முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன், உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து, மிகுந்த துயரம் அடைந்தேன். 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் அறிமுகமாகி, 'குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, இதயக்கமலம், அதே கண்கள்' உட்பட, 180 படங்களில் முத்திரை பதித்து, தமிழ் ரசிகர்களால், 'வெள்ளி விழா நாயகன்' என்று போற்றப்பட்டு, அவர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரவிச்சந்திரன். அவரது மறைவு, தமிழ் திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. நடிகராக மட்டுமன்றி, இயக்குனராகவும் பரிணமித்தவர் ரவிச்சந்திரன். அவரது ஆன்மா, இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சென்னை : மறைந்த நடிகர் ரவிச்சந்திரன் உடலுக்கு, அரசியல், சினிமா பிரமுகர்கள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ரவிச்சந்திரனுக்கு, 71, மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 19ம் தேதி, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே, தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, அங்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு, ரவிச்சந்திரன் இறந்தார்.

தி.நகர், ராஜா பாதர் தெருவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரன் உடலுக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட சினிமா துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

வைகோ கூறும்போது,''தமிழ் சினிமாவின் இளமையான நடிகர் ரவிச்சந்திரன். அவர் மறைந்தாலும், 'காதலிக்க நேரமில்லை' போன்ற திரைப்படங்கள் மூலம், ரசிகர் மனதில் என்றும் இளைஞராக நிறைந்திருப்பார்,'' என்றார்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறும்போது,''ரவிச்சந்திரனின் மறைவு, தமிழ் சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு, தி.மு.க.,வின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். ரவிச்சந்திரனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. அவருக்கு விமலா என்ற மனைவி, லாவண்யா என்ற மகள், பாலாஜி, அம்சவர்தன் ஆகிய மகன்கள் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us