முதலில் பிரதமர் ராஜினாமா செய்யட்டும்அப்புறம் என்கிட்ட வாங்க: எடியூரப்பா
முதலில் பிரதமர் ராஜினாமா செய்யட்டும்அப்புறம் என்கிட்ட வாங்க: எடியூரப்பா
முதலில் பிரதமர் ராஜினாமா செய்யட்டும்அப்புறம் என்கிட்ட வாங்க: எடியூரப்பா
ADDED : ஜூலை 26, 2011 11:45 PM
பெங்களூரு: பல குற்றச்சாட்டுகளில் சிக்கிய பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா
செய்ய வேண்டும், என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
சுரங்க ஊழல் குறித்து, லோக் ஆயுக்தாவின் இறுதி அறிக்கை இன்று தாக்கல்
செய்யப்பட உள்ளது. இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, முதல்வர்
எடியூரப்பா வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், மாநில பா.ஜ.,
தலைவர் ஈஸ்வரப்பா, எம்.பி., சதானந்த கவுடா, அமைச்சர்கள் ஜெகதீஷ் ஷெட்டர்,
பசவராஜ் பொம்மை, லட்சுமண் சவதி, உமேஷ் கட்டி, சி.சி.பாட்டீல் உட்பட பலரும்
கலந்து கொண்டனர்.கூட்டத்துக்குப் பின், முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:
மத்திய அரசின் ஊழல்களை மறைக்க, மாநில பா.ஜ., அரசு மீது தேவையின்றி
குற்றம்சாட்டி வருகிறது. லோக் ஆயுக்தாவின் அறிக்கை தாக்கல் செய்த பின்,
மற்ற விஷயங்கள் குறித்து கருத்துக் கூறுவேன்.மத்திய அரசின் தவறுகளை மூடி
மறைக்க, எதிர்க்கட்சியினர், மாநில அரசு மீது குற்றச்சாட்டுகளைக் கூறி
வருகின்றனர். பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன்
சிங், ராஜினாமா செய்த பின், மற்றவர்களின் ராஜினாமாவை காங்கிரஸ்
கேட்கட்டும்.
சந்தோஷ் ஹெக்டேவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின், அது குறித்து
விவாதிக்க, ஆகஸ்ட் 5ம் தேதி பா.ஜ., எம்.எல்.ஏ., க்கள் கூட்டம்
கூட்டப்படும். அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின், சந்தோஷ் ஹெக்டேவை
சந்தித்து ஆலோசனை நடத்துவேன். கட்சி மேலிடத் தலைவர்களைச் சந்திக்க வேண்டிய
தேவை ஏற்பட்டால், டில்லிக்குச் செல்வேன்.சட்டசபையின் மழைக்காலக்க
கூட்டத்தொடர், ஆகஸ்ட் முதல் தேதி துவங்கவுள்ளது. கூட்டத்தொடரில், மாநில
அரசுக்கு எதிராகக் கிளம்பும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பது குறித்து,
இம்மாதம் 31ம் தேதி சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்படவுள்ளது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கேள்விக்கே இடமில்லை. மீதமுள்ள இரண்டு
ஆண்டுகள் நானே முதல்வராகத் தொடருவேன்.சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கும்,
எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த வகையில், லோக் ஆயுக்தாவின்
அறிக்கையில் என் பெயர் இருக்காது, என்ற நம்பிக்கை எனக்குள்ளது. கட்சியில்
ஒற்றுமை இருக்கும் வரை, ஆட்சித் தலைமையில் மாற்றம் என்பதற்கே இடமில்லை,
என்றார்.இதற்கிடையில், பா.ஜ., தலைவர்கள் டில்லியில் ஆலோசனை நடத்தியதாகத்
தெரிகிறது. எடியூரப்பாவை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக, கட்சித்
தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் உருவாகியுள்ளன. லோக் ஆயுக்தா இறுதி
அறிக்கை வெளிவந்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம், என்று பா.ஜ.,
மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.பெங்களூரில் நேற்று நடந்த
கார்கில் தின விழாவில் பங்கேற்ற முதல்வர் எடியூரப்பாவிடம், அரசியல்
நெருக்கடி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர்,
அரசியல் பேசமாட்டேன், என்று கூறி விட்டுச் சென்றார்.