Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/அங்கீகாரமின்றி இயங்கிய கல்வி நிறுவனத்துக்கு "சீல்' :வெளி நாட்டு வேலைவாய்ப்பு என கூறி மோசடி

அங்கீகாரமின்றி இயங்கிய கல்வி நிறுவனத்துக்கு "சீல்' :வெளி நாட்டு வேலைவாய்ப்பு என கூறி மோசடி

அங்கீகாரமின்றி இயங்கிய கல்வி நிறுவனத்துக்கு "சீல்' :வெளி நாட்டு வேலைவாய்ப்பு என கூறி மோசடி

அங்கீகாரமின்றி இயங்கிய கல்வி நிறுவனத்துக்கு "சீல்' :வெளி நாட்டு வேலைவாய்ப்பு என கூறி மோசடி

ADDED : ஆக 26, 2011 01:13 AM


Google News
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே முறையான அங்கீகாரமின்றி கடந்த ஏழாண்டாக இயங்கிவந்த தனியார் கல்வி நிறுவனம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. புதுக்கோட்டை டவுன் தெற்கு மூன்றாம் வீதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்(40). இவர் அதே பகுதியில், சி.ஆர்.எம்., கேட்டரிங் பயிற்சி நிறுவனம், புதுக்கோட்டை - திருச்சி மெயின் ரோட்டில் சத்தியமங்கலம் அருகில், 'ஃபயர் சேப்டி மேனேஜ்மென்ட்' என்ற பெயரில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த பயிற்சி நிறுவனம் நடத்திவந்தார். இவை இரண்டும் கடந்த ஏழாண்டாக இயங்கி வருகிறது.

சத்தியமங்கலம் ஃபயர் சேப்டி மேனேஜ்மென்ட் நிறுவனம், திருச்சி அண்ணா பல்கலை மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலை அங்கீகாரம் பெற்றுள்ளது. இங்கு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புக்கான வகுப்பு நடக்கிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருகிறோம் என விளம்பரம் செய்யப்பட்டது. மிகைப்படுத்தப்பட்ட இந்த விளம்பரங்களை பார்த்து தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இந்த நிறுவனத்தில் சேர்ந்தனர். இவர்களிடமிருந்து குறைந்தபட்சம், 60 ஆயிரம் ரூபாய் முதல், 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில், 300 மாணவர்கள் படிக்கின்றனர். பயிற்சி முடித்த மாணவர்கள் பலர், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருமாறு கல்வி நிறுவன இயக்குனர் முருகானந்தத்திடம் கேட்டுள்ளனர். வெளிநாடு செல்ல விரும்பிய மாணவர்களிடமிருந்து மேலும் இரண்டு லட்ச ரூபாய்வரை வசூல் செய்த முருகானந்தம், டூரிஸ்ட் விசா மூலம் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவில் வேலை என்ற நம்பிக்கையுடன் வெளிநாடு சென்ற மாணவர்கள், பல மாதங்களாக வேலைவாய்ப்பின்றி தவித்தபின் ஊர்திரும்ப மனமின்றி கட்டுமான நிறுவனங்களில் சேர்ந்து கூலிவேலை பார்க்கின்றனர். ஏமாற்றத்துடன் ஊர்திரும்பிய மாணவர்கள் சிலர், பெற்றோருடன் சேர்ந்து கல்வி நிறுவன இயக்குனர் முருகானந்தத்திடம் வெளிநாடு செல்வதற்காக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். அவர்களை அடியாட்கள் மூலம் முருகானந்தம் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர், இதுகுறித்து புதுக்கோட்டை கலெக்டர், எஸ்.பி., மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவித்தனர். ஊஷாரடைந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீஸார், முருகானந்தத்துக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள சி.ஆர்.எம்., கேட்டரிங் பயிற்சி நிறுவனம் மற்றும் சத்தியமங்கலத்தில் உள்ள ஃபயர் சேப்டி மேனேஜ்மென்ட் நிறுவனங்களில் நேற்றுமுன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், இரு நிறுவனங்களும் பல்கலையின் முறையான அங்கீகாரமின்றி இயங்கியதும், இங்கு படித்த மாணவர்களுக்கு போலி சான்றிதழ் அச்சடித்து வழங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சத்தியமங்கலம் ஃபயர் சேப்டி மேனேஜ்மென்ட் பயிற்சி நிறுவனத்துக்கு நேற்று காலை சென்ற குளத்தூர் தாசில்தார் சகாயராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர், அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர், பீரோ, லாக்கர் உள்ளிட்ட தளவாடங்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தபின் நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர். தாசில்தார் சகாயராஜ் கொடுத்த புகாரின் பேரில், பயிற்சி நிறுவன இயக்குனர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவான அவரை தேடிவருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us