கறுப்பு பணம் குறித்த சிறப்பு புலனாய்வுக் குழு அமையுமா?
கறுப்பு பணம் குறித்த சிறப்பு புலனாய்வுக் குழு அமையுமா?
கறுப்பு பணம் குறித்த சிறப்பு புலனாய்வுக் குழு அமையுமா?
UPDATED : செப் 24, 2011 05:55 AM
ADDED : செப் 23, 2011 11:55 PM

புதுடில்லி: வெளிநாடுகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை கண்டுபிடிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைப்பது தொடர்பான வழக்கை, அதிக நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு, சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது. இதனால், கறுப்பு பண விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு இப்போதைக்கு உருவாக்க வாய்ப்பில்லை. இந்தியர்களால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவில்,'வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரமாகச் செயல்படவில்லை. எனவே, இது தொடர்பான அரசின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படுகிறது' என, தெரிவித்தது. 13 பேர் கொண்ட இந்த குழுவுக்கு, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜீவன் ரெட்டி, தலைவராக நியமிக்கப்பட்டார். நீதிபதி எம்.பி.ஷா என்பவர், துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவில் மாற்றம் செய்ய வலியுறுத்தி, மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது, சரியான நடவடிக்கை அல்ல. கறுப்பு பணத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில், அரசு மென்மையாகச் செயல்படுகிறது என, கோர்ட் கூறியதும் சரியல்ல. எனவே, சிறப்பு விசாரணைக் குழு அமைப்பது தொடர்பான உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளைத் தாண்டி மற்றொரு அமைப்பு மேற்பார்வையிடும் பொறுப்பில் நியமிக்கப்படலாமா என்பது அரசு எழுப்பிய சந்தேகம்.
இந்தக் கேள்வியை எழுப்பிய மனு, நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், நிஜ்ஜார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, நீதிபதி அல்தாமஸ் கபீர், 'மத்திய அரசின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளத்தக்கதே. இந்த மனு குறித்து விசாரணை நடத்தலாம்' என, தீர்ப்பளித்தார். ஆனால், மற்றொரு நீதிபதியான நிஜ்ஜார், 'மத்திய அரசின் மனுவை ஏற்க முடியாது' என, தீர்ப்பளித்தார். இந்த விவகாரத்தில், நீதிபதிகளின் வேறுபட்ட தீர்ப்பு காரணமாக, இந்த வழக்கு, அதிக நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறுகையில், 'நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பின் காரணமாக, இந்த விவகாரம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இதன் பின், அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் ஒன்றை அமைத்து, இந்த வழக்கை விசாரிக்கும்படி, தலைமை நீதிபதி உத்தரவிடுவார்.
அதிக நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சின் தீர்ப்பை பொறுத்தே, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படுமா என்பது தெரிய வரும். அதுவரை, கறுப்பு பணம் தொடர்பான நடவடிக்கைகளில், சிறப்பு விசாரணைக் குழுவின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படும்' என்றனர். இதனால், கறுப்பு பணம் குறித்த சுப்ரீம் கோர்ட் முடிவு வெளியாக கால தாமதம் ஆகும் என்பதால், அரசு இதில் இனி அவசரப்பட வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது.