தலைநகரில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் சுப்ரீம் கோர்ட் உதவியை நாடியது டில்லி அரசு
தலைநகரில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் சுப்ரீம் கோர்ட் உதவியை நாடியது டில்லி அரசு
தலைநகரில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் சுப்ரீம் கோர்ட் உதவியை நாடியது டில்லி அரசு
ADDED : ஜூன் 01, 2024 12:45 AM

புதுடில்லி டில்லியில், கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, ஹிமாச்சல் அரசு வழங்கிய உபரி நீரை திறந்து விட ஹரியானா அரசுக்கு உத்தரவிடக் கோரி, அமைச்சர் ஆதிஷி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.
போராட்டம்
நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான வெப்ப அலையால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்காக அல்லாடு கின்றனர். லாரிகளில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கு பெரும் போராட்டமே நடக்கிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், சமீப காலமாக, கடுமையான வெப்பநிலை நிலவுகிறது. டில்லியின் ஒருசில இடங்களில், 50 டிகிரி செல்ஷியசுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகிறது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல், மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். தண்ணீர் என்பது, தனி மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். இது அரசியலமைப்பின், 21வது பிரிவில் அளிக்கப்பட்ட உத்தரவாதமும் கூட.
கோடை மாதங்களில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, ஹிமாச்சல் அரசுடன், டில்லி அரசு ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அதன்படி, டில்லிக்கு உபரிநீரை வழங்க, ஹிமாச்சல் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
ஒத்துழைப்பு
அம்மாநிலத்துடன் டில்லி எல்லையைப் பகிர்ந்து கொள்ளாததால், அங்கிருந்து வரும் உபரி நீர், ஹரியானாவின் வழித்தடங்கள் வழியாக, வஜிராபாத் தடுப்பணைக்கு வந்து, அதன் வழியாக டில்லிக்கு வர வேண்டும்.
ஆனால், இந்த விவகாரத்தில் ஹரியானாவில் ஆளும் பா.ஜ., அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தற்போதைய தண்ணீர் நெருக்கடியை சரி செய்யாவிட்டால், வரும் காலங்களில் நிலைமை மேலும் மோசமாகலாம். எனவே, ஹிமாச்சல் வழங்கிய உபரி நீரை திறந்து விடும்படி, ஹரியானா அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது நேரமல்ல!
டில்லியில் உள்ள பா.ஜ., நிர்வாகிகள், தங்கள் கட்சி ஆளும் ஹரியானா மற்றும் உ.பி., அரசுகளுடன் பேசி, டில்லிக்கு ஒரு மாதத்துக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் செய்வதற்கு இது நேரமல்ல.
கெஜ்ரிவால், டில்லி முதல்வர், ஆம் ஆத்மி