போனை எடுத்து சென்ற கணவனுக்கு 'எலக்ட்ரிக் ஷாக்' கொடுத்த மனைவி
போனை எடுத்து சென்ற கணவனுக்கு 'எலக்ட்ரிக் ஷாக்' கொடுத்த மனைவி
போனை எடுத்து சென்ற கணவனுக்கு 'எலக்ட்ரிக் ஷாக்' கொடுத்த மனைவி
UPDATED : ஜூன் 01, 2024 07:18 AM
ADDED : ஜூன் 01, 2024 01:34 AM

மெயின்புரி : உத்தர பிரதேசத்தில், மொபைல் போனை கணவன் எடுத்துச் சென்றதால், ஆத்திரமடைந்த மனைவி, அவருக்கு 'எலக்ட்ரிக் ஷாக்' கொடுத்து, அடித்து உதைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யின் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதீப் சிங், 33. இவருக்கு, 2007ல், அவுரேயா பகுதியைச் சேர்ந்த பேபி யாதவ் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு, 14 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், பேபி யாதவ் தினமும் பல மணி நேரம் மொபைல் போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த பிரதீப் சிங், இது குறித்து பேபி யாதவ் குடும்பத்தினரிடமும் புகார் அளித்துள்ளார்.
அவர்கள் அளித்த யோசனையின்படி, பேபி யாதவின் மொபைல் போனை, அவருக்கு தெரியாமல் பிரதீப் சிங் எடுத்துச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த பேபி யாதவ், தன் கணவன் பிரதீப் சிங் வீட்டுக்கு வந்தவுடனே, கிரிக்கெட் பேட்டால் சரமாரியாக தாக்கி உள்ளார்.
மேலும், அவரது கை, கால்களை கட்டிப் போட்டு, எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்துள்ளார்; தடுக்க வந்த மகனையும், அவர் தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த பிரதீப் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேபி யாதவ் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.