லோக்சபா தேர்தல் காலத்தில் ரூ.1,150 கோடி பணம் பறிமுதல்
லோக்சபா தேர்தல் காலத்தில் ரூ.1,150 கோடி பணம் பறிமுதல்
லோக்சபா தேர்தல் காலத்தில் ரூ.1,150 கோடி பணம் பறிமுதல்
UPDATED : ஜூன் 01, 2024 07:14 AM
ADDED : ஜூன் 01, 2024 01:34 AM

புதுடில்லி : லோக்சபா தேர்தல் காலகட்டத்தில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் நகைகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் தேதி மார்ச் 16ல் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இந்த விதிமுறைகள் அமலில் இருக்கும்.
இந்த காலகட்டத்தில், வாக்காளர்களை ஈர்ப்பதற்காக எடுத்து செல்லப்படும் பணம், நகைகள், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்ட பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த பணி வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன.
தனிநபர்கள் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற 50,000 ரூபாய்க்கு மேலான ரொக்கம் மற்றும் 10,000 ரூபாய்க்கு மேல் மதிப்புடைய பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் 10 லட்சம் ரூபாயை தாண்டினால், அது வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த வகையில், நடப்பு லோக்சபா தேர்தல் காலகட்டத்தில், நாடு முழுதும் 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவை, 2019 லோக்சபா தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம். கடந்த தேர்தலின் போது, 390 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போதைய தேர்தலில் டில்லி மற்றும் கர்நாடகாவில் அதிகபட்சமாக 200 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் கைப்பற்றப்பட்டன.
தமிழகத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தலா 100 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துஉள்ளது.