தமிழகத்தில் பி.டி., பருத்தி நுழைகிறதா? :விவசாய அமைப்புகள் அச்சம்
தமிழகத்தில் பி.டி., பருத்தி நுழைகிறதா? :விவசாய அமைப்புகள் அச்சம்
தமிழகத்தில் பி.டி., பருத்தி நுழைகிறதா? :விவசாய அமைப்புகள் அச்சம்

சென்னை : பட்ஜெட் புத்தகத்தின் 13வது பக்கத்தில், மூன்றாவது பத்தியில், 'பி.டி., பருத்தியை பரவலாக்குதல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் உகந்த பயிர் மேலாண்மையை கடைபிடித்தல் போன்றவை தீவிரமாக பரவலாக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் உள்ள தகவல் குறித்து, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் மணிகண்டன் கூறியதாவது: மரபணு மாற்றம் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்பது தான், அ.தி.மு.க.,வின் நிலை. தி.மு.க., ஆட்சியில், கோவை வேளாண் பல்கலை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தி, சோதனை அடிப்படையில் பயிர் செய்தபோது, அதைக் கண்டித்து மாபெரும் போராட்டம் நடந்தது. இதில், பல்வேறு சமூக அமைப்புகள் தீவிரமாக பங்கேற்றன.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை பயன்படுத்தி சாகுபடி செய்யுமாறு, இதுவரை தமிழக அரசு நேரடியாக விவசாயிகளை அறிவுறுத்தவில்லை. ஆனால், சில தனியார் நிறுவனங்கள், உயர் ரக விதைகள் என ஏமாற்றி, விவசாயிகளிடம் விற்பனை செய்கின்றனர். முந்தைய ஆட்சிக் காலத்தில், இது போன்ற விதைகளை பயன்படுத்தி, கரூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளும், தர்மபுரி மாவட்டத்தில் பருத்தி பயிரிட்ட விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பருத்தி விதை முளைக்கவேயில்லை. இதனால், சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு தி.மு.க., அரசு நஷ்ட ஈடு வழங்கியது.
தற்போது, 'பி.டி., பருத்தியை பரவலாக்க நடவடிக்கை எடுப்போம்' என, பட்ஜெட்டில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரிகள் செய்த தவறுகள் காரணமாகவே, இந்த அறிவிப்பு இடம் பெற்றிருக்கும் என நம்புகிறோம். இந்த பிரச்னையை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். இவ்வாறு மணிகண்டன் கூறினார்.
அ.தி.மு.க., வட்டாரத்தில் விசாரித்தபோது, 'இந்த விவகாரம் முதல்வருக்கோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ தெரிந்து நடந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரிகளே, இந்த அறிவிப்பை பட்ஜெட்டில் நுழைத்து விட்டதாகத் தெரிகிறது. இதை திட்டமிட்டே செய்தனரா அல்லது தவறாக நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், இந்தப் பிரச்னை முதல்வர் கவனத்திற்கு சென்றால், உடனடியாக நடவடிக்கை எடுப்பார்' என்றனர்.
மகாராஷ்டிர மாநில விவசாயிகள், ஏற்கனவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தி பருத்தி சாகுபடி செய்தனர். அதிகளவு மகசூல் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி பயிரிட்ட விவசாயிகள், எந்தவித மகசூலும் கிடைக்காமல் பெருத்த கடனுக்கு ஆளாகி, பலர் தற்கொலை செய்து கொண்டனர். ஆந்திராவிலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஷப்பரீட்சை வேண்டாம் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நல்லசாமி கூறியதாவது: மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்த, பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இதை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, அ.தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகளும், விவசாய அமைப்புகளும், முந்தைய ஆட்சிக் காலத்தில் போராட்டம் நடத்தின. இப்படியிருக்கும் போது, பட்ஜெட்டில், பி.டி., பருத்தியை பரவலாக்கும் அறிவிப்பு எப்படி இடம்பெற்றது என்று தெரியவில்லை. பி.டி., விதைகளை சோதனை முறையில் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்று நினைப்பது கூட தேவையற்றது. இது, தேவையில்லாத விஷப்பரீட்சை. அரசு எடுத்த முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு நல்லசாமி கூறினார்.
ஏ.சங்கரன்