Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வினியோகம்: விமான விபத்து

ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வினியோகம்: விமான விபத்து

ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வினியோகம்: விமான விபத்து

ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வினியோகம்: விமான விபத்து

ADDED : ஜூன் 23, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
மும்பை: ஆமதாபாதில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக, 25 லட்சம் ரூபாய் வழங்கும் பணி துவங்கியுள்ளது.

குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து ஜூன் 12ல் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டனுக்கு புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம் விபத்துக்குள்ளானது.

ஆமதாபாதில் உள்ள மருத்துவக் கல்லுாரி விடுதியில் மோதி ஏற்பட்ட இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் 29 மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் என, 270 பேர் பலியாகினர். ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார்.

இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, தலா 1 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என, ஏர் இந்தியா நிறுவனத்தை நடத்தும் டாடா குழுமம் அறிவித்திருந்தது.

இதைத் தவிர, தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:

இடைக்கால நிவாரணமாக, தலா 25 லட்சம் ரூபாயை இதுவரை மூன்று குடும்பத்தினர் பெற்றுள்ளனர். மற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆவணங்கள் வழங்குதல், டி.என்.ஏ., அடையாளம் காணுதல், இறந்த உடல்களை கொண்டு செல்வது, இறுதிச் சடங்கு ஏற்பாடு களை ஒருங்கிணைக்கவும் கடந்த 15 முதல் உதவி மையமும் செயல்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை, 247 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, 232 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

விமான பாகங்கள் அகற்றம்

குஜராத்தின் ஆமதாபாத் மெகானி நகர் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லுாரி மாணவர் விடுதியில் மோதி விபத்துக்குள்ளான இந்த விமானத்தின் உடைந்த பாகங்களை அகற்றும் பணி நடக்கிறது. சேதமடைந்த பாகங்களை விபத்து நடந்த இடத்தில் இருந்து, சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் உள்ள குஜராத் மாநில விமான உட்கட்டமைப்பு நிறுவனத்துக்கு, நேற்று முதல் கொண்டு செல்லப்படுகின்றன.



வெடிகுண்டு மிரட்டல்

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரிமிங்ஹாமில் இருந்து டில்லிக்கு நேற்று இயக்கப்பட்ட ஏர் - இந்தியா நிறுவனத்தின் விமானத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.இதையடுத்து, இந்த விமானம், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணியர் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீவிர சோதனைக்குப் பின், அது புரளி என்பது தெரியவந்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us