Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

PUBLISHED ON : செப் 19, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
தமிழர்களை கேவலப்படுத்துவதா? கடல்.மலர்மன்னன், கோபிசெட்டிபாளையத்திலிருந்து எழுதுகிறார்: தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாடு பழக்க வழக்கங்கள் மிக சிறப்பானவை என்பது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிரூபிக்கப்பட்டுள்ளது. தெய்வத்தன்மையுடன் வாழ்ந்த மனித தெய்வங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் அவதரித்து வந்துள்ளனர் என்பதும் உலகறிந்த விஷயம். உலக நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டானது தமிழ் நாகரிகம் என்பது, மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட தமிழ் கலாசாரத்தின் வழி வந்த நம் பள்ளிக் குழந்தைகள், கீழ்கண்டவாறு பாடம் படித்தால், நம் கலாசாரத்தையும், நம் முன்னோர்களின் மனிதத் தன்மையையும் எவ்வாறு புரிந்து கொள்வர் என்பதை, உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்...ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின், 21ம் பக்கத்தில், 39 முதல், 45 வரை உள்ள வரிகள்...'கன்பூசியசிசம், கிறிஸ்துவம் மற்றும் புத்தம் ஆகியவை, மனித நாகரிக வரலாற்றில் மனிதன் இயல்பாக இருந்த கொடூர தன்மையை ஒரு மேம்பட்ட நோக்கத்தை நோக்கி மாற்றுவதற்கான உணர்வுப் பூர்வமான முயற்சிகளாக விளக்குகின்றன!'மேற்கண்ட வரிகள், நம் தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் வரிகளா அல்லது இழிவான வரிகளா? கன்பூசியஸ், கிறிஸ்து, புத்தம் ஆகிய சமயங்கள் தான் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றியதா? மக்களிடம் மனிதத் தன்மையை வளர்த்ததா?- மேலும், அதே பக்கத்தில், 'தமிழர்களாகிய நாம் முதலில் சூரியன், மழை, நிலம், காற்று, நெருப்பு போன்ற இயற்கையை தெய்வங்களாக வழிபட்டோம். பிறகு நம் முன்னோர்களை தெய்வமாக வழிபட்டோம். இப்படியாக நாம் பலரும் நம் முன்னோர்களை அவரவர் குலத்திற்கு குலதெய்வமாக வழிபட்டு, நமக்கு பல தெய்வ வழிபாடு உண்டு என்பதையும் நாம் அறிவோம்...' என்றுள்ளது.மேலும், இதே பக்கத்தில் இரண்டாம் பத்தியில், 15வது வரியில், 'பல தெய்வ வழிபாடு மற்றும் மூட நம்பிக்கை சடங்குகள் போன்றவை, சமூக ஒற்றுமையையும், பகுத்தறிவு சிந்தனைகளையும், வாழ்வியல் ஒழுக்கங்களையும் மேம் படாமல் தடுத்து சீரழித்து வந்தன' என்று உள்ளது.அப்படியெனில், தமிழர்களுடைய பல தெய்வ வழிபாட்டு முறையால் தான் சமுதாயத்தில் ஒழுக்கங்கள் சீரழிந்ததா? தமிழன் தான் சமுதாய சீரழிவுக்கு காரணமா? வேறு ஒருவரை உதாரணம் காட்டி, ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தையும் ஏன் கேவலப்படுத்துகின்றனர்?

வாழ்நாள் வாசகர் வாழ்த்து!சி.செல்வராஜ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நெஞ்சுரம், நேர்மைத்திறன், சேவை மனப்பான்மையில், தொலை நோக்குப்பார்வை, சமூக நலனில் அதீத ஈடுபாடு, காற்றை விட வேகமாக, செய்திகளைச் சேகரித்து வெளியிடும் பாங்கு, தவறுகளை சுட்டிக்காட்டும் பாங்கு, கல்வி வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்பு, தவறாக தகவல் தரப்பட்டதை சுட்டிக் காட்டினால், தார்மீகப் பொறுப்பேற்கும் பெருந்தன்மை இவையனைத்தும், ஒருங்கே பெற்ற, 'தினமலர்' இதழ், 61ம் ஆண்டில் கால் பதித்துள்ளது.'தினமலர்' இதழின், வாழ்நாள் வாசகர் என்ற முறையில், என் இனிய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அகவை, 61 என்ற போதிலும், தளர்ச்சி ஏதுமின்றி, 16 வயது இளைஞனைப் போல் வேகத்துடனும், விவேகத்துடனும், உத்வேகத்துடனும் மக்கள் நலன் கருதி, தொடர்பணியை, 'தினமலர்' மேற்கொள்ளும் என நம்புகிறேன்.

அசுர வேகத்தில் அட்டகாசம்!ஜி.எஸ்.ராஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: அதிக குதிரை சக்தி கொண்ட, இரு சக்கர வாகனங்களில் வீதி உலா வரும் இளைஞர்கள், வாகனங்களை சாலைகளில் கண்மூடித்தனமாக ஓட்டிச் செல்கின்றனர்.தேவையே இல்லாமல், அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டி, அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், தாங்களும் விபத்தில் சிக்கி, மற்றவர்களையும் விபத்துக்கு உள்ளாக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது. சாலையைத் தங்களுக்குத்தான் பட்டயம் எழுதிக்கொடுத்துவிட்டதாக நினைத்து, இவர்கள் செய்யும் சாகசங்கள், மக்களை பயமுறுத்தி வருகிறது.ஆக்சிலேட்டரை முழுவதுமாக முறுக்கிக்கொண்டு, சாலைகளில் பாம்புகளைப் போல் வளைந்து, நெளிந்து தாறுமாறாக ஓட்டுவது, குறுகிய இடைவெளியில் முந்துவது, முந்த முயற்சிப்பது, ஓடிக்கொண்டிருக்கும், இரு வாகனங்களுக்கு இடையே புகுந்து, 'கட்' செய்வது, இடதுபுறமாக முந்துவது என, பலரை பயமுறுத்தி வருகின்றனர்.தலைக்கவசம் அணிந்து கொண்டோ, அணியாமலோ தலை தெறிக்கும் வேகத்தில், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஓட்டுவதால், பாதசாரிகள் பீதியில் உறைந்து போகின்றனர்.பல இரு சக்கர வாகனங்களில், பின்புறமாக வரும் வாகனங்களைப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும், 'ரியர் வீயூமிர்'களை காணமுடிவதே இல்லை. அவை அப்புறப்படுத்தப்படுவது ஏன் என்றும் தெரியவில்லை.தனக்கும், மற்றவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இத்தகைய அசுரவேக, இரு சக்கர வாகன ஓட்டுனர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.சாலை விதிகளைப் பின்பற்றாமல், அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்களைப் பிடித்து, கடுமையான அபராதம் விதிக்கவும், தொடர்ந்து சாலை விதிகளை மீறும்பட்சத்தில், வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும், போக்குவரத்து போலீசார் முன்வர வேண்டும்.

நிதிஷ் குமார் காட்டுகிறார் வழி!கோதை ஜெயராமன், மீஞ்சூரிலிருந்து எழுதுகிறார்: வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை சேர்க்கும், அரசு மற்றும் அமைச்சர்களின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு, பள்ளிகளாக மாற்றும் நடவடிக்கையை பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சமீபத்தில் ஆரம்பித்துள்ளார்; இதை, அம்மாநில மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். அதைபோல், தமிழக அரசும், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சட்டசபை, பார்லிமென்ட், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள், தம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை, தம் பெயரிலோ அல்லது உறவினர்கள் பெயரிலோ பத்திரப் பதிவு செய்திருந்தால், அதை மீட்கலாம்.அதை, அரசு சொத்தாக சேர்க்கும் வகையில் சட்டம் இயற்றி, அச்சொத்துக்களை பள்ளி, கல்லூரி, சமூக கூடங்கள், மருத்துவமனைகளாக, மக்கள் பயன்படுத்தும் விதத்தில் மாற்றலாம்.கட்சிப் பாகுபாடின்றி, யாராக இருந்தாலும், பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்தால், அரசுக்கு மக்களிடம் நன்மதிப்பு பெருகுவதுடன், 'ஒரு நல்ல நோக்கத்தின் அடிப்படையிலேயே, அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது' என, அனைத்து தரப்பினரிடமும் பாராட்டு கிடைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us