PUBLISHED ON : ஜூன் 06, 2024 12:00 AM

'வயதாகி விட்டதால் தடுமாறுகிறார்...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதீஷ் குமாரை பற்றி பேசுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.
கூட்டணி தாவலுக்கு பெயர் பெற்றவர், நிதீஷ் குமார். பீஹாரில், தன் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், பா.ஜ., ஆகிய இரு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இப்போது பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்.
இது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழும்போதெல்லாம் அதை பொருட்படுத்தாமல், பதவி இருந்தால் போதும் என சத்தமில்லாமல் இருப்பார்.
சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, அவரது பேச்சு சர்ச்சையையும், கிண்டலையும் ஏற்படுத்தியது. ஒரு கூட்டத்தில், 'இந்த தேர்தலில், மத்தியில் உள்ள தே.ஜ., கூட்டணி, 4,000 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும்...' என்றார்.
'மொத்தமே, 543 தொகுதிகள் தானே, இவர், 4,000 தொகுதிகள் என்கிறாரே...' என, பலரும் ஆச்சரியப்பட்டனர். வாய் தவறி பேசி விட்டதாக சமாளித்தார்.
அடுத்த சில நாட்களில் நடந்த மற்றொரு பிரசாரத்தில், பா.ஜ., மத்தியில் நன்றாக ஆட்சி செய்கிறது என கூறுவதற்கு பதிலாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் என கூறி விட்டார். அவரது இந்த பேச்சும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
'நிலையாக ஒரு அணியில் இல்லாமல் மாறி மாறி கூட்டணி வைத்தால், இப்படித் தான் தடுமாற வேண்டியிருக்கும்...' என கிண்டல் அடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.