PUBLISHED ON : ஜூன் 05, 2024 12:00 AM

'எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், சிறை வாழ்க்கை, அவர்களுக்கு பாடம் புகட்டி விடுகிறது...' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை பற்றி பேசுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.
டில்லியில் நடந்த மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் சிக்கி, ஒரு மாதத்துக்கு மேலாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவால், லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு அனுமதி கோரி, சமீபத்தில் ஜாமினில் வந்தார்.
ஜாமின் காலம் முடிவடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அவர், 'எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதனால், இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும்...' என, குறிப்பிட்டிருந்தார்.
அவரது மனு நிராகரிக்கப் பட்டதை அடுத்து, மீண்டும் சிறைக்கு சென்று சரண் அடைந்தார். அதற்கு முன் நடந்த நிகழ்வுகள் தான், மிகவும் சுவாரஸ்யமானவை.
தன் பெற்றோரை சந்தித்து ஆசி பெற்ற கெஜ்ரிவால், தன் மனைவி மற்றும் மகளிடம் கண் கலங்க விடை பெற்றுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் கண் கலங்கவே, கெஜ்ரிவால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டார் என்கின்றனர், அவரது கட்சியினர்.
'என்ன தான், டில்லிக்கு ராஜாவாக இருந்தாலும், சிறைக்கு சென்றால் கைதியாகத் தானே இருக்க வேண்டும். அதை நினைத்து தான் கெஜ்ரிவால் கண் கலங்கியிருப்பார். உப்பு தின்றால், தண்ணீர் குடித்து தானே ஆக வேண்டும்...' என்கின்றனர், பா.ஜ.,வினர்.