ADDED : ஜூலை 11, 2011 10:43 PM
ஊட்டி : 'இந்தியாவில் கண்புரை நோய் தாக்கப்பட்டவர்களில் 89 சதவீதம் பேர் பார்வையிழக்கின்றனர்,' என சங்கர நேத்ராலயா தலைவர் தெரிவித்தார்.ஊட்டியில் தி ஹை பவுண்டேஷன் கண் மருத்துவமனை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
ஊட்டியில் நடந்த திறப்பு விழாவில் இன்போசிஸ் தலைமை நிர்வாக அலுவலர் சிபுலால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். விழாவில், சென்னை சங்கர நேத்ராலயாவின் தலைவர் டாக்டர் பத்ரிநாத் தலைமை வகித்து பேசுகையில்,''இந்தியாவில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்வையிழந்தவர்கள் உள்ளனர். உலகிலேயே பார்வையிழந்தவர்களில் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் கண்புரை நோய் தாக்கப்பட்டவர்களில் 89 சதவீதம் பேர் பார்வையிழந்து விடுகின்றனர். பார்வையிழப்புக்கு கண்புரை நோய் முக்கிய காரணமாகும். தற்போது இந்த எண்ணிக்கை 89 சதவீதத்திலிருந்து 58 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசுடன் தன்னார்வ அமைப்புகள் மற்றும் கண் மருத்துவர்கள் ஒருகிணைந்து செயல்பட்டால் பார்வையிழப்பை தடுக்க முடியும்,'' என்றார். இந்தியா அணுசக்தி கழக முன்னாள் தலைவர் சீனிவாசன், குட்ஷெப்பர்டு பள்ளி முதல்வர் தாமஸ், டாக்டர் ராமமூர்த்தி, டாக்டர் சித்ரா ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.