மருத்துவ அதிகாரி மர்ம சாவு : மூன்று மாதத்தில் அறிக்கை
மருத்துவ அதிகாரி மர்ம சாவு : மூன்று மாதத்தில் அறிக்கை
மருத்துவ அதிகாரி மர்ம சாவு : மூன்று மாதத்தில் அறிக்கை
லக்னோ : உத்தரபிரதேச மாநில சுகாதாரத்துறை துணை மருத்துவ அதிகாரி சச்சான், சிறையில் மர்மமான முறையில் இறந்தது குறித்து, விசாரித்து மூன்று மாதத்தில் அறிக்கை அளிக்கும் படி, அலகாபாத் ஐகோர்ட், சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச சுகாதாரத் துறையில், துணை மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய சச்சான், கடந்த மாதம் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, லக்னோ சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஏப்ரலில், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, தலைமை மருத்துவ அதிகாரி, பி.பி.சிங் கொலையில், சச்சான் முக்கிய நபராக செயல்பட்டார் என, குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது மர்ம மரணம் சர்ச்சையைக் கிளப்பியது.
இவ்வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கக் கோரி, அலகாபாத் ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்று, தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சச்சானின் மர்ம மரணம் தொடர்பான, 76 பக்க விசாரணை அறிக்கை, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சச்சானின் கழுத்து, முழங்கைகள், தொடை மற்றும் மணிக்கட்டுகளில் காயங்கள் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், 'அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம்' என, கூறப்பட்டது. இதையடுத்து, சச்சான் மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உ.பி., முதல்வர் மாயாவதி உத்தரவிட்டார்.
இதனிடையே, சச்சான் மரணம் தொடர்பான விசாரணை, அலகாபாத் ஐகோர்ட்டில் நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரதீப் காந்த் மற் றும் ரிதுராஜ் அவஸ்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 'சச்சான் மரணம் குறித்தும், இவருக்கு முன் கொல்லப்பட்ட மருத்துவ அதிகாரிகள் வி.கே.ஆர்யா மற்றும் பி.பி.சிங் ஆகியோரது மரணங்கள் குறித்தும், சி.பி.ஐ., விசாரணை நடத்தி, மூன்று மாதங்களுக்குள் அறிக்கையளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.