/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ வண்ண வண்ண மக்காச்சோளம் பயிரிடும் தியாகராஜ் வண்ண வண்ண மக்காச்சோளம் பயிரிடும் தியாகராஜ்
வண்ண வண்ண மக்காச்சோளம் பயிரிடும் தியாகராஜ்
வண்ண வண்ண மக்காச்சோளம் பயிரிடும் தியாகராஜ்
வண்ண வண்ண மக்காச்சோளம் பயிரிடும் தியாகராஜ்
ADDED : செப் 20, 2025 11:16 PM

சிக்கபல்லாபூர் மாவட்டம், ஷிட்லகட்டா தாலுகாவில் உள்ள அப்பேகவுடனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஏ.எம்.தியாகராஜ், 45; விவசாயி. இவருக்கு விவசாயத்தில் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்தது.
இதற்காக தன் நிலத்தில் புதிய விதமான பயிர்களை பயிரிடுவது, இயற்கை உரங்களை பயன்படுத்துவது போன்றவை செய்து வருகிறார்.
இவர் சமீபத்தில் தன் வயலில் மக்காச்சோளத்தை பயிரிட்டார். இதில் என்ன சிறப்பு என நீங்கள் நினைக்கலாம். இந்த மக்காச்சோளம் நம் நாட்டில் விளைவிக்கப்படும் வழக்கமான ஆரஞ்ச் நிறத்தில் இருக்ககூடிய மக்காச்சோளம் கிடையாது.
மாறாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட, பல வண்ணங்களில் காட்சியளிக்க கூடிய வெளிநாட்டு ரக மக்காச்சோளத்தின் விதைகளை வாங்கி, தன் நிலத்தில் பயிரிட்டார்.
ஜொலிக்கும் சோளம் இந்த மக்காச்சோளங்கள் அனைத்தும் தற்போது நன்கு வளர்ந்து, பல நிறங்களில் காட்சி அளிக்கின்றன. இதை பார்க்கவே, பல விவசாயிகள் அவரது வயலுக்கு வருகின்றனர். விவசாயிகளை தாண்டி, மக்களுமே பல வண்ணங்களில் ஜொலிக்கும் மக்காச்சோளத்தை பார்க்கவும், ருசிக்கவும் வருகின்றனர்.
இதனால், தியாகராஜ் மாவட்ட அளவில் மிகவும் பிரபலமடைந்தார். சோளத்தையும், அவரையும் பலரும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். இது அவருக்கு மேலும் புகழை தேடி தந்தது.
இப்படி விவசாயத்தின் மீது கொண்ட காதலால், புகழ் பெற்ற தியாகராஜ் கூறியதாவது:
இந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்வதற்கு நான்கு மாதங்கள் தேவைப்படுகின்றன. உள்ளூர் சோளத்தில் ஒரு செடிக்கு ஒரு கதிர் மட்டுமே கிடைக்கும். ஆனால், வெளிநாட்டு சோளத்தில் ஒரு செடிக்கு மூன்று கதிர்கள் வரை கிடைக்கின்றன. எனவே, மகசூலும் அதிகமாகிறது.
கருப்பு, சிவப்பு, காக்கி போன்ற ஏழு நிறங்களில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளேன். இந்த மக்காச்சோளங்களுக்கு மார்க்கெட்டில் நல்ல மவுசு இருக்கிறது.
ஆசை இது போன்ற மக்காச்சோளத்தை என் ஊர் முழுவதும் விளைவிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. இந்த வகை மக்காச்சோளங்கள் முதலில் பெரு நாட்டில் பயிரிடப்பட்டன. பிறகு, உலகம் முழுவதும் பல நாடுகளில் பயிரிடப்பட்டு வருகின்றன. எனவே, இவ்வகை மக்காச்சோளம் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பலரிடமும் கேட்டு வந்தேன். அப்போது, லட்சுமண் என்ற விவசாயி பல நிற மக்காச்சோளம் குறித்து எடுத்துரைத்தார்.
இதுகுறித்து, அமெரிக்காவில் உள்ள என் நண்பரிடம் கூறினேன். அவரே மக்காச்சோளத்தின் விதைகளை எனக்கு அனுப்பினார். இதன் மூலமே மக்காச்சோளத்தை விளைவித்து, மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறேன். இந்த மக்காச்சோளத்தின் நிறத்தை பார்த்தே பலரும் வாங்கிச் செல்கின்றனர். மேலும், இதை விளைவிப்பவர் யார் என என்னை பலரும் தொடர்பு கொண்டு, பேசி வருகின்றனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.