Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ விபத்தில் பலியாகும் நாய்களை அடக்கம் செய்யும் நபர்

விபத்தில் பலியாகும் நாய்களை அடக்கம் செய்யும் நபர்

விபத்தில் பலியாகும் நாய்களை அடக்கம் செய்யும் நபர்

விபத்தில் பலியாகும் நாய்களை அடக்கம் செய்யும் நபர்

ADDED : செப் 20, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
சாலை விபத்தில் தெருநாய்கள் பலியாவதை பார்க்கும்போது, நம்மில் பலர் அதை கடந்து சென்றுவிடுவோம். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக மைசூரை சேர்ந்தவர், இவ்வாறு பலியாகும் நாய்களை நல்ல முறையில் அடக்கம் செய்து வருகிறார்.

மைசூரு நகரின் உத்பூர் - சிந்துவள்ளி சாலையில் 'பவ் பவ் பெட் ரிசார்ட்' நடத்தி வருபவர் உமேஷ். தன் ரிசார்ட்டில் நாய்களுக்கு தேவையான பயிற்சி, உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறார்.

விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நாய்களை அடக்கம் செய்து வருவது குறித்து உமேஷ் கூறியதாவது:

இப்பகுதியில் பல ஆண்டுகளாக ரிசார்ட் நடத்தி வருகிறேன். 2020 ஆக., 31ம் தேதி, இப்பகுதியில் சாலை விபத்தில் நாய் ஒன்று இறந்ததாக தகவல் கிடைத்தது. வழக்கமாக இவ்வாறு நாய்கள் இறந்தால் மாநகராட்சி வனப்பிரிவுக்கு தகவல் தெரிவிப்பர்.

எனக்கு அழைப்பு வந்ததால், நானும் சென்றேன். அங்கு வாகனத்தில் சிக்கி உயிரிழந்த நாயை, அருகில் சாலை டிவைடரில் உள்ள மரங்கள், செடிகளுக்கு அருகில் பள்ளம் தோண்டி அடக்கம் செய்தேன். இதன் மூலம் இறந்த நாய்கள் மக்கி, மரத்துக்கு உரமாக மாறிவிடும். அன்று முதல் சாலைகளில் நாய்கள் பலியானால் எனக்கு தகவல் வந்துவிடும்.

இவ்வாறு செய்வதால், பொது மக்களுக்கும், விலங்குகளுக்கும் உடல் நல பாதிப்பு ஏற்படாது. அத்துடன், விபத்தில் தெரு நாய் தானே இறந்தது என்று எண்ணாமல், அவற்றுக்கும் கவுரவம் அளித்து உரிய முறையில் அடக்கம் செய்வது சிறந்தது.

ஹின்கல் மேம்பாலத்தில் இருந்து போகடி வட்டச்சாலை ஜங்ஷன் சாலையில் வாகனங்கள் சீறிப்பாய்வதால், பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. அதுபோன்று, சதகள்ளி வட்டச்சாலை ஜங்ஷன் மற்றும் மணிப்பால் மருத்துவமனை ஜங்ஷன் பகுதியில் பல நாய்கள் விபத்தில் இறக்கின்றன.

இறைச்சி கடை நடத்துபவர்கள், ஹோட்டல் நடத்துபவர்கள், தங்கள் கடைகளில் மீதமாகும் உணவுகளை, இரவு நேரத்தில் சட்ட விரோதமாக சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர். இவற்றை பார்க்கும் நாய்கள், சாப்பிடுவதற்காக சாலையை கடக்கும்போது, வாகனங்கள் மோதி உயிரிழக்கின்றன.

இறைச்சிகளை அறிவியல் பூர்வமாக அகற்ற வேண்டும். அதை விடுத்து, சுகாதாரமற்ற முறையில் வீசுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலை, ஸ்ரீரங்கபட்டணா வரை நாய்கள் இறந்தாலும் கூட எனக்கு தகவல் கிடைத்துவிடுகிறது. ஐந்து ஆண்டுகளில் 509 நாய்கள் அடக்கம் செய்துள்ளேன். நடப்பாண்டு இதுவரை 21 நாய்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

விபத்தில் உயிரிழக்கும் நாய்களுக்கு கவுரவமான முறையில் அடக்கம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும். இது தவிர, என் சொந்த செலவில் வீட்டு செல்லப்பிராணிகளான நாய்கள், பூனைகள் இறந்தால் அவைகளை அடக்கம் செய்ய சுடுகாடும் அமைத்துள்ளேன். இதன் மூலம் அவற்றை முறையான வகையில் அடக்கம் செய்யப்படும்.

நாய்கள் வளர்ப்போர், அவற்றை அடக்கம் செய்ய இடம் இல்லாதபோது, என் நிலத்தில் தேவையான தொகையை பெற்றுக் கொண்டு அடக்கம் செய்கிறேன்.

நாய்களுக்கும் மனிதர்களை போன்று குடும்பம் உள்ளன; உணர்ச்சி வசப்படக்கூடியவை.

இவ்வாறு விபத்தில் நாய்கள் இறந்தால், 99862 84468 என்ற மொபைல் வாட்ஸாப் எண்ணில், நாய் இறந்து கிடக்கும் இடத்துடன் கூடிய 'மேப்'பை அனுப்பினால், விரைவாக அந்த இடத்தை கண்டுபிடிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us