எஸ்.ஐ., ஆனாலும் கபடியில் கலக்கும் உஷா ராணி
எஸ்.ஐ., ஆனாலும் கபடியில் கலக்கும் உஷா ராணி
எஸ்.ஐ., ஆனாலும் கபடியில் கலக்கும் உஷா ராணி
ADDED : செப் 18, 2025 11:07 PM

சில விளையாட்டை நாம் விட்டாலும், விளையாட்டு நம்மை விடாது என்று கூறுவர். இதற்கு சிறந்த உதாரணமாக கிரிக்கெட், கேரம் போர்டு, கபடி விளையாட்டுகளை கூறலாம்.
இளம் வயதில் விளையாட்டில் ஜொலித்தவர்கள், வயதான பின் விளையாட்டில் இருந்து ஒதுக்கி கொள்ளலாம் என்று நினைத்தாலும், சிறுவயதில் அவர்கள் ரசித்து விளையாடிய விளையாட்டுகளை மீண்டும் ஒரு முறையாவது விளையாட முடியாதா என்ற எண்ணம் வருவது வழக்கம். எஸ்.ஐ., ஆன பின்னரும் பெண் அதிகாரி ஒருவர், தொடர்ந்து கபடி போட்டியில் பங்கேற்கிறார்.
பூ வியாபாரம் பெங்களூரின் யஷ்வந்த்பூர் சுபேதார்பாளையாவை சேர்ந்தவர் உஷா ராணி, 37. போலீஸ் துறையில் எஸ்.ஐ.,யாக பணியாற்றும் இவர் கபடி வீராங்கனை.
தற்போதும் மாநில, தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
உஷா ராணி, ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாய் புட்டம்மா. பூ வியாபாரம் செய்தவர். இரண்டு சகோதரர், சகோதரிகளுடன் பிறந்த உஷா ராணி, சிறு வயதில் தாயுடன் இணைந்து பூ கட்டி விற்பனை செய்தார்.
யஷ்வந்த்பூரில் இருந்து வித்யா பீடத்தில் உள்ள பள்ளிக்கு, பஸ்சில் செல்ல பணம் இல்லாமல், சில நாட்களில் நடந்தே சென்று கல்வி கற்றவர். ஆனாலும் கபடி விளையாடுவதில் இவருக்கு இருந்த ஆர்வம் அளப்பரியது.
இவரது தந்தை பள்ளியில் கபடி வீரராகவும், தாய் புட்டம்மா ஷாட் புட் வீராங்கனையாகவும் இருந்தவர்கள். விளையாட்டில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருவருக்கும் இருந்தது. ஆனால் அவர்களால் சாதிக்க முடியவில்லை.
விருதுகள் மகள் உஷா ராணிக்கு கபடி மீது ஆர்வம் இருந்ததை பார்த்து, கபடி கிளப்பில் சேர்த்து விட்டனர். கிளப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் மாநில, தேசிய போட்டிகளுக்கு தேர்வாகி அங்கேயும் சிறப்பாக விளையாடினார்.
சர்வதேச அளவில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு தேடிவந்தது. கல்லுாரி படிப்பு முடித்த பின், கர்நாடக போலீஸ் துறையில் விளையாட்டு கோட்டாவில் அவருக்கு எஸ்.ஐ., வேலை கிடைத்தது.
போலீஸ் வேலைக்கு சென்ற பின், உஷா ராணி கபடி விளையாட வர மாட்டார் என்பது பெரும்பாலானோர் எண்ணமாக இருந்தது.
ஆனால் எங்கு போட்டி நடந்தாலும் வர தயார் என்பது போல, முதல் ஆளாக வந்து நின்றார் உஷா ராணி. தற்போதும் இந்திய பெண்கள் கபடி அணியில் உள்ளார். கபடியில் சிறந்து விளங்கியதற்காக ராஜ்யோத்சவா, ஏகலைவா, முதல்வர், கெம்பேகவுடா விருதுகளையும் பெற்று உள்ளார்.
- நமது நிருபர் -