11 வயதிலேயே ஸ்கேட்டிங்கில் தங்கம்
11 வயதிலேயே ஸ்கேட்டிங்கில் தங்கம்
11 வயதிலேயே ஸ்கேட்டிங்கில் தங்கம்
ADDED : செப் 18, 2025 11:06 PM

'ஆசிய ஓபன் ஸ்பீட் ஸ்கேட்டிங் கோப்பை போட்டி 2025' கடந்த மாதம் 20 முதல் 23ம் தேதி, உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் நடந்தது. இதில், 11 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இது இந்தியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான சர்வதேச குளிர்கால விளையாட்டு போட்டியாகும். இந்த போட்டியில் பதக்க பட்டியலில் தாய்லாந்து முதல் இடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும், ஜப்பான் 3வது இடத்தையும் பெற்று அசத்தின.
புது சாதனை இந்த போட்டியின் மூலம் நம் தேசத்திற்கு புதிய இளம் ஐஸ் ஸ்கேட்டிங் வீரர் கிடைத்து உள்ளார். அதுவும் அந்த இளம் வீரர், நம் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். அரண்மனை நகரின் மைந்தன் கிர்டி ராஜ் சிங், 11. இவர், நடந்து முடிந்த போட்டியில் ஐஸ் ஸ்கேட்டிங்கில் ஜூனியர் பிரிவில், 777 மீட்டர்
போட்டியில் 1:22 நிமிடத்திலும், 500 மீட்டர் போட்டியில் 50.97 வினாடிகளிலும் கடந்து தங்க பதக்கங்களை வென்றார். இதன் மூலம் நம் நாட்டிற்காக இரண்டு தங்க பதக்கங்களை வென்றார். 777 மீட்டர் போட்டியில் தேசிய அளவில் விரைவாக கடந்து புது சாதனையை படைத்து உள்ளார். இதனால், இவரை ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியாவின் தங்க மகன் என அழைக்க துவங்கி உள்ளனர். இவரை ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியாவின் எதிர்காலம் எனவும் புகழ துவங்கி உள்ளனர். வீரர் கிர்டி ஐஸ் ஸ்கேட்டிங், ரோலர் ஸ்கேட்டிங் என, இரண்டிலும் சாதனை புரிந்து வருகிறார். இதுவரை நான்கு முறை தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கங்கள் பெற்றார். தொடர்ந்து நான்கு முறை ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியிலும், பதக்கங்கள் பெற்று சாதித்து வருகிறார்.
7ம் வகுப்பு இத்தனை பாராட்டுக்குரிய கிர்டி, மைசூரில் உள்ள மஹாஜனா பப்ளிக் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் சுனில் சிங் - ரிதா தேவி ஆவர். ராவ்ஸ் ரோலர் ஸ்கேட்டிங் கிளப்பின் பயிற்சியாளரான ஸ்ரீகாந்திடம், பயிற்சி பெற்று வருகிறார். ஆசிய போட்டியில் தங்க பதக்கங்களை வென்ற பிறகு, தனது பயிற்சியை தீவிரப்படுத்தி உள்ளார்.
சாதனை என்பதை ஒரே நாளில் செய்துவிட முடியாது. மாறாக கடின உழைப்பு, ஆர்வம், லட்சியத்துடன் செயல்பட்டால் மட்டுமே சாதனைகளை செய்ய முடியும் என்பதற்கு கிர்ட்டியே எடுத்துக்காட்டு.
- நமது நிருபர் -