வீல்சேர் டென்னிசில் சாதிக்கும் 2 வீராங்கனையர்
வீல்சேர் டென்னிசில் சாதிக்கும் 2 வீராங்கனையர்
வீல்சேர் டென்னிசில் சாதிக்கும் 2 வீராங்கனையர்
ADDED : செப் 18, 2025 11:11 PM

சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், கர்நாடகாவை சேர்ந்து இரு வீராங்கனைகள், வீல்சேர் டென்னிசில் சாதித்து வருகின்றனர். பிரேசில், இலங்கையில் நடக்கும் சர்வதேச போட்டிகளில், இருவரும் நாட்டிற்காக இரட்டையர் பிரிவில் பங்கேற்கின்றனர்.
பெங்களூரை சேர்ந்தவர் பிரதிமா ராவ் - மாண்டியாவை சேர்ந்த ஷில்பா புட்டராஜு.
இருவருக்கும் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள். இவர்களால் இனி எதுவும் செய்ய முடியாது என்று நினைத்தவர்களின் கனவில் மண்ணை போட்டனர்.
ஆம்... இருவரும் தேசிய அளவில் கர்நாடகாவுக்காகவும், உலகளவில் இந்திய நாட்டுக்காகவும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உள்ளனர். இதற்கு முன் தனித்தனியாக எதிரெதிராக போட்டியிட்டு வந்தனர்.
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் சீனாவின் தைபேயில் வரும் அக்., 17 முதல் 27 வரையிலும்; பிரேசிலில் அக்., 18 முதல் 26 வரையிலும்; இலங்கையில் நவ., 18 முதல் டிச., 1ம் தேதி வரை நடக்கும் போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர்.
கடினமான டென்னிசை தேர்ந்தெடுத்தது குறித்து பிரதிமா ராவ் கூறுகையில், ''என்னை குறையாக நினைப்பவர்கள் முன் சாதித்து காட்ட வேண்டும் என்று ஆசை இருந்தது. அதற்கான பதிலை, இத்துறையில் நான் சாதித்து காட்டி வருகிறேன்.
''என் இயலாமையால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று என்னை பார்ப்பவர்கள் கூறி வந்தனர். அத்தகைய எண்ணம் தவறு என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்,'' என்றார்.
மற்றொரு வீராங்கனை ஷில்பா புட்டராஜு கூறுகையில், ''டென்னிசை தேர்ந்தெடுக்க எந்த காரணமும் இல்லை. ஆரம்பத்தில் அதை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால், நான் விளையாடும்போது, அதை மேலும் மேலும் விரும்ப ஆரம்பித்தேன். இப்போது நான் அதை தொடர்கிறேன்.
''டென்னிஸ் என்பது சகிப்பு தன்மை விளையாட்டு. பெரும்பாலான உடல் விளையாட்டுகள் போன்று, இதற்கும் உடல் உழைப்பு தேவைப்படும். எனக்கு தெரிந்த வரை, என் திறமை இன்னும் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை,'' என்றார்.
- நமது நிருபர் -