பெங்., மாநகராட்சியின் மீட்டர் வட்டி தொழில்
பெங்., மாநகராட்சியின் மீட்டர் வட்டி தொழில்
பெங்., மாநகராட்சியின் மீட்டர் வட்டி தொழில்
ADDED : மார் 21, 2025 03:40 AM
பெங்களூரு : ''பெங்களூரில் 7,000 ரூபாய் வரி பாக்கிக்கும், வீடுகளுக்கு பூட்டு போட்டு ஏலம் விடப்படுகிறது. மாநகராட்சியை மீட்டர் வட்டி தொழிலுக்கு விட்டு உள்ளீர்களா,'' என சட்டசபையில் பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.
கர்நாடக சட்டசபையில், பட்ஜெட் தொடர்பாக நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ., - ராமமூர்த்தி: இதற்கு முன், பெங்களூரு மாநகராட்சியில், 3,000 கோடி ரூபாய் சொத்து வரி வசூலானது. எங்கள் அரசு வந்த பின், இ - காத்தா மூலம், 2024 - 25ல், 4,500 கோடி ரூபாய் வசூலித்தது. அடுத்த ஆண்டு 6,000 கோடி ரூபாய் வசூலிக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.
வீடுகளுக்கு பூட்டு
வரி பாக்கி என, ஏற்கனவே 10,000 வீடுகளுக்கு பூட்டு போட்டுள்ளனர். 7,000 ரூபாய் வரி பாக்கிக்கும், வீடுகளை ஜப்தி செய்து ஏலம் விட, முயற்சி நடக்கிறது. பெங்களூரில் 125 ரூபாய் வரி பெற்று கொண்டு, 5 லட்சம் இ - காத்தா அளிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த காத்தாக்கள் செல்லாது, புதிதாக விண்ணப்பியுங்கள் என, கூறுகின்றனர். இ - காத்தா இல்லாமல், சொத்துகளை பதிவு செய்ய முடியவில்லை; அரசு அனுமதி அளிக்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் அசோக்: பெங்களூரில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் பலவந்தமாக கடனை வசூலிப்பது போன்று, வரி வசூல் செய்யப்படுகிறது. 12 மாதங்களுக்கு பின், ஒரு நாள் வரி செலுத்த தாமதமானாலும், ஒன்றுக்கு, இரண்டு மடங்கு அபராதம், 15 சதவீதம் வட்டி சேர்த்து வசூலிக்கின்றனர். மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை விட, வரி வசூலில் அதிக முறைகேடு நடக்கிறது.
சட்டங்கள்
நாட்டின் எந்த பகுதியிலும், இத்தகைய சட்டங்கள் இல்லை. அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை, நானும் பார்த்தேன். இவர்களுக்கு சட்டத்தை கற்று தந்தது யார். இதுபோன்ற சட்டங்களால் மக்கள் பாதிப்படைகின்றனர். மாநகராட்சியில் மீட்டர் வட்டி தொழில் நடக்கிறது. வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, மக்களின் உதவிக்கு வர வேண்டும்.
இதற்கு முன், கிருஷ்ண பைரேகவுடா, 'நான் எவ்வளவு கூறினாலும், அதிகாரிகள் என் பேச்சை கேட்பதில்லை' என தன் இயலாமையை தெரிவித்திருந்தார். இப்போது அவர், தலையில் கை வைத்து அமர்ந்திருப்பதை பார்த்தால், மாநகராட்சியை, மீட்டர் வட்டி தொழிலுக்கு விட்டிருப்பதை போன்று தோன்றுகிறது.
அசோக் கூறியதை, பா.ஜ., உறுப்பினர் அஸ்வத் நாராயணாவும் ஆமோதித்தார்.
ராமமூர்த்தி: பெங்களூரில் மக்கள் வாழ்க்கை நடத்துவது எப்படி. பலவந்தமாக 6,000 கோடி ரூபாய் வரி வசூலிக்கின்றனர். இதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மாநகராட்சி அதிகாரிகள் நான்கைந்து கார்களில் சென்று, தம்பட்டம் அடித்து, நோட்டீஸ் ஒட்டுகின்றனர். இதனால் சிலர் அவமானம் தாங்காமல், தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.