Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடுகளம்/ பெங்களூரில் ஐ.பி.எல்., ஜுரம் கோலியை காண ரசிகர்கள் ஆர்வம்

பெங்களூரில் ஐ.பி.எல்., ஜுரம் கோலியை காண ரசிகர்கள் ஆர்வம்

பெங்களூரில் ஐ.பி.எல்., ஜுரம் கோலியை காண ரசிகர்கள் ஆர்வம்

பெங்களூரில் ஐ.பி.எல்., ஜுரம் கோலியை காண ரசிகர்கள் ஆர்வம்

ADDED : மார் 14, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18வது ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் 22ம் தேதி துவங்கி மே 25ம் தேதி வரை நடக்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஐதராபாத் என்று 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

இதுவரை நடந்த 17 சீசனில் மும்பை, சென்னை அணிகள் தலா 5 முறையும்; கோல்கட்டா 3; ஐதராபாத், ராஜஸ்தான், டெக்கான் சார்ஜர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்று உள்ளன.

ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் சென்னை, மும்பை அணிகளுக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்கள் கொண்ட அணி பெங்களூரு. இதுவரை அந்த அணி ஒரு முறை கூட, கோப்பையை கைப்பற்றியது இல்லை.

லெஜெண்ட் வீரர்கள்


இத்தனைக்கு அந்த அணியின் கேப்டன்களாக லெஜண்ட் கிரிக்கெட் வீரர்களான ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, விராட் கோலி, பாப் டூ பிளிசிஸ் இருந்து உள்ளனர்.

நட்சத்திர வீரர்கள் இருந்தாலும், அந்த அணி கோப்பையை வெல்லாதது சோகம். ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல்., துவங்கும் முன்பு, 'ஈ சாலா கப் நமதே' என்று பெங்களூரு ரசிகர்கள் கூறுவதும், கோப்பையை வெல்ல முடியாமல் போகும் போது, ரசிகர்கள் சோகத்திற்கு போவதும் தொடர்கதையாக நடக்கிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தொடரில், பெங்களூருக்கு முதல் போட்டி சென்னை அணியுடன் உள்ளது. வரும் 28ம் தேதி இரு அணிகளும் சந்திக்கின்றன. போட்டிக்கு முன்பு நடந்த பயிற்சி முகாம், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆரம்பித்து உள்ளது. பெங்களூரு அணியில் இடம் பெற்று உள்ள வீரர்கள், ஒவ்வொருவராக பயிற்சி முகாமில் இணைய ஆரம்பித்து உள்ளனர்.

ரஜத் படிதார்


இம்முறை பெங்களூரு அணியின் கேப்டனாக மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரஜத் படிதார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஸ்வஸ்திக் சிக்காரா ஆகிய பேட்டர்களும்; லியாம் லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரோமியோ செபர்ட், மனோஜ் பண்டகே, ஜேக்கப் பெத்தேல் ஆகிய ஆல் ரவுண்டர்களும், ஜோஸ் ஹாசில்வுட், சுயேஷ் சர்மா, ரஷிக் தார், புவனேஸ்வர் குமார், நுவன் துசாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோகித் ராதே, யாஷ் தயாள் ஆகிய பவுலர்களும் இடம் பிடித்து உள்ளனர்.

அணியை பார்க்கும் போது, சமமான கலவையாக உள்ளது. அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடி, இம்முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பமாக உள்ளது. சமீபத்தில் 50 ஓவர் சாம்பியன் டிராபி போட்டிகள் நடந்து முடிந்தன.

இதில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை தட்டி துாக்கி உள்ளது. பேட்டிங்கில் பார்ம் இன்றி தவித்த, விராட் கோலி மீண்டும் பார்முக்கு வந்து உள்ளார். இது, பெங்களூரு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து உள்ளது.

பெங்களூரு அணி இம்முறை கோப்பையை வெல்லும். அவர் மேட்ச் வின்னராக இருப்பார், இல்லை இவர் மேட்ச் வின்னராக இருப்பார் என்று, ரசிகர்கள் பேசி கொள்ள ஆரம்பித்து உள்ளனர்.

கடைகளிலும் ஆர்.சி.பி., அணியின் ஜெர்சி விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. ஒட்டுமொத்தத்தில் பெங்களூரில் ஐ.பி.எல்., ஜுரம் துவங்கி உள்ளது. போட்டிகளின் போது தங்களுடைய ஆதர்ஷ நாயகன் கோலியை காண, ரசிகர்களும் தயாராக உள்ளனர் - நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us