முகநுால் மூலம் பசி நீக்கும் மஹிதா
முகநுால் மூலம் பசி நீக்கும் மஹிதா
முகநுால் மூலம் பசி நீக்கும் மஹிதா
ADDED : செப் 15, 2025 05:40 AM

சமூக வலைதளம் வெறும் செய்திகள் மட்டும் பார்க்க அல்ல; ஆக்கப்பூர்வமான விஷயங்களையும் செய்வதற்கு என்பதை பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் நிரூபித்து காட்டி உள்ளார்.
பெங்களூரை சேர்ந்த மஹிதா கூறியதாவது:
ஒரு நாள் இரவு கடுமையான பசியால் உறங்க முடியாமல் தவித்தேன். படுக்கையில் படுத்து கொண்டே, நான் நன்றி அற்றவளாகவும், சுயநலவாதியாகவும் இருப்பதை உணர்ந்தேன். வீட்டில் அனைத்து வசதிகளுடன் இருக்கிறேன். ஆனால் கோடிக்கணக்கான மக்கள், பசியால் உறங்க முடியாமல் இருப்பரே என்று நினைத்து பார்த்தேன். அரை மணி நேரம் இதுவே என் எண்ணமாக இருந்தது.
மறுநாள் காலை எப்.ஒய்.என்., எனும், 'பீட் யுவர் நெய்பர்' என்ற பெயரில் சமூகத்தை உருவாக்க நினைத்தேன். இதை மக்களிடம் எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்று யோசித்த போது, உலகின் மூலை முடுக்கிலும் சென்றடையும் முகநுாலை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்தேன்.
தனி நபரால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதை காட்டுவதே என் நோக்கம். அதே வேளையில், இதையே அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டால், இதுவே ஒரு அலையாக உருவாகி, சமூகத்திற்கு பயனளிக்கும் என்று நம்பினேன்.
முதலில், இதை செயல்படுத்துவது எனக்கு கடினமாக இருந்தது. ஏனெனில், மக்கள் எந்தெந்த பகுதியில் இருந்து உணவு வழங்க விரும்புகின்றனர் என்பதை பார்த்தோம். அதன் அருகில் உணவு வினியோகிக்கும் மையங்களுடன் இணைந்து, மக்கள் கொடுக்கும் உணவுகளை சேகரித்தோம்.
எங்களின் கோரிக்கை '5 பேருக்கு கூடுதலாக சமைக்கவும்' என்பது தான். இந்த பதிவை முகநுாலில் அறிவித்ததும், பலரும் உணவு தயாரிக்க ஆர்வம் காட்டினர். 2015 அக்., 12 முதல் 22ம் தேதி வரை 11 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு உணவளிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தோம்.
முதல் நாள் 4,454 சாப்பாடு வினியோகித்தோம். 11 நாட்களில், மொத்தம் 1.22 லட்சம் பேருக்கு உணவு வழங்கியது எங்களுக்கு பெருமையாக இருந்தது.
எங்களின் முயற்சிக்கு பல ரெஸ்டாரென்ட்கள், ரவுண்ட் டேபிள் சங்கம், லேடீஸ் சர்க்கிள், சேனா விஹார் லேடீஸ் குரூப் என பல தன்னார்வ சங்கங்கள் உதவின.
உறவினர்களால், குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் அளித்த உணவை விட, சிறிது நேரம் அவர்களுடன் பேசியபோது, பாசத்துக்கு ஏங்கியது தெரியவந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -