ஐ.நா., சபை விருது பெற்ற மகளிர் சங்கம்
ஐ.நா., சபை விருது பெற்ற மகளிர் சங்கம்
ஐ.நா., சபை விருது பெற்ற மகளிர் சங்கம்
ADDED : செப் 15, 2025 05:41 AM

அதிகம் கல்வி அறிவு பெறாத வீடுகள், வயல்களில் வேலை செய்யும் 14 பெண்கள் உருவாக்கிய ஒரு அமைப்பு, இன்று உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. நகர்ப்புற பெண்களுக்கு, நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர்.
தார்வாட் மாவட்டம், குந்த்கோல் தாலுகாவில், தீர்த்தா என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் பெண்கள் தங்களின் உழைப்பு, விடா முயற்சியால் இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டு, ஐ.நா., சபையால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குந்த்கோல், ஹாவேரி மாவட்டத்தின், ஷிகாவி பகுதிகளில் இதற்கு முன், பருத்தி, நெல், மக்காச்சோளம் அதிகமாக பயிரிடப்பட்டது. சிறுதானியங்கள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. சமீப ஆண்டுகளாக இதன் மகத்துவத்தை உணர்ந்து, விவசாயிகள் சிறுதானியங்கள் பயிரிட, விவசாயத்துறை ஊக்கப்படுத்துகிறது.
குந்த்கோலின், தீர்த்தா கிராமத்தின் 14 பெண்கள் சேர்ந்து, தன்னார்வ தொண்டு அமைப்பின் துாண்டுதலால், 'பீபி பாத்திமா மகளிர் சங்கம்' என்ற பெயரில் சங்கம் அமைத்தனர். இந்த அமைப்பின் மூலம், சிறு தானியங்கள் விளைவிப்பதில், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின் றனர். பல கிராமங்களில் சிறுதானியங்கள் பயிரிடுவதில், விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில் இந்த மகளிர் சங்கத்தினர், முக்கிய பங்கு வகித்தனர்.
அப்பகுதியின் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில், தற்போது சிறுதானியங்கள் விளைகின்றன. இவர்களின் சேவையை அடையாளம் கண்டு, 2025ல் ஐ.நா., சபை, மகளிர் சங்கத்துக்கு, 'ஈக்வேடர் இனிஷியேடிவ்' விருது வழங்கி கவுரவித்துள்ளது. நடப்பாண்டு விருதுக்கான போட்டியில், 103 நாடுகளின், 700 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பல சோதனைகள் நடத்திய பின், 'பீபி பாத்திமா மகளிர் சங்கம்' தேர்வு செய்யப்பட்டது. இந்த விருது 8.5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு கொண்டதாகும். இந்த விருது நோபல் பரிசுக்கு ஒப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
பீபி பாத்திமா மகளிர் சங்கம் இத்தகைய சிறப்பான விருதை பெற்று, கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. மற்ற பெண்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளது.
இது குறித்து, மகளிர் சங்கத்தின் தலைவி பீபிஜான் மவுலாசாப் கூறியதாவது:
சிறுதானியங்கள் பயிரிட, அதிகம் செலவிட வேண்டியது இல்லை. கால்நடைகளுக்கு தீவனமும் கிடைக்கும். எங்கள் சங்கத்தின் சார்பில் தானிய பதப்படுத்தும் மையம் செயல்படுகிறது. சிறுதானியங்களை சேமிக்கிறோம்.விவசாய உற்பத்தி சங்கத்தின் மூலமாக, மார்க்கெட் உருவாக்கியுள்ளோம்.
சிறு தானிய சந்தைகள், மேளாக்கள் ஏற்பாடு செய்கிறோம். இதில் நாங்களே சிறுதானியங்களால் தயாரித்த சப்பாத்தி, பொடி, மால்ட் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறோம். தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி நாடுகளின் பிரதிநிதிகள் எங்களின் மையத்துக்கு வந்து பார்வையிட்டு, பாராட்டினர்.
வரும் நாட்களில் கூட்டுறவு சங்கம் அமைத்து, அதிகமான சங்கங்களை எங்களுடன் இணைக்க திட்டமிட்டுள்ளோம். எங்களின் தானிய பதப்படுத்தும் மையத்திற்கு, எலிவேட்டர் வசதி வேண்டும். விதை வங்கிக்கு அரசு நிலம் வழங்க வேண்டும். தேவையான அடிப்படை வசதிகள் செய்தால், மிகவும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -