Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/புதிய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி: பைடன் விளக்கம்

புதிய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி: பைடன் விளக்கம்

புதிய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி: பைடன் விளக்கம்

புதிய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி: பைடன் விளக்கம்

ADDED : ஜூலை 25, 2024 11:06 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: ‛‛ புதிய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி'' என அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து பைடன் விளக்கமளித்தார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் களமிறங்கினர். வயது மூப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஜோ பைடன் இந்த தேர்தலில் இருந்து விலகினார். இதனையடுத்து ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள அதிபர் பைடன் அந்நாட்டு மக்களிடம், தனது முடிவு குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பது தான் சிறந்த வழி என முடிவு செய்தேன். அதுவே, நாட்டை ஒற்றுமைபடுத்துவதற்கான சிறந்த வழி. பொது வாழ்க்கையில் கொண்ட நீண்ட அனுபவத்திற்கு உரிய நேரமும், இடமும் உண்டு. புதுக்குரல்கள், இளமையான குரல்களுக்கு தற்போது நேரம் வந்துள்ளது.50 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டிற்கு சேவை செய்ய எனது வாழ்க்கையை அர்ப்பணித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிபர் எனும் புனிதமான இடத்தில் என்னைச் சுற்றி மிகச்சிறந்த அதிபர் புகைப்படங்கள் உள்ளன. நாட்டை வழிநடத்தும் மிகச்சிறந்த வார்த்தைகளை தாமஸ் ஜெபர்சன் எழுதி உள்ளார். அதிபர்கள் மன்னர்கள் அல்ல என்பதை ஜார்ஜ் வாஷிங்டன் நமக்கு காட்டி உள்ளார். தீமையை நிராகரிக்க தூண்டிய ஆபிரஹாம் லிங்கன், பயத்தை நிராகரிக்க வேண்டிய பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஆகியோர் இருந்த இந்த அதிபர் அலுவலகத்தை மதிக்கிறேன்.

அதை விட எனது நாட்டை நான் அதிகம் நேசிக்கிறேன். அமெரிக்க அதிபராக பணியாற்றுவது எனது வாழ்க்கையில் மரியாதை. ஆனால் ஆபத்தில் உள்ள ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பது எந்த பதவியையும் விட முக்கியமானது. அமெரிக்க மக்களுக்காக பணியாற்றுவதில் மகிழ்ச்சி பெறுகிறேன். வலிமை அடைகிறேன்.

துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் அனுபவம் மிக்கவர். திறமையானவர். வியக்கத்தக்க வகையில் என்னுடன் இணைந்து பணியாற்றினார். நாட்டிற்கு சிறந்த தலைவராக உள்ளார். தற்போது முடிவு மக்கள் கையில் உள்ளது. அமெரிக்காவை மன்னர்கள், சர்வாதிகாரிகள் ஆட்சி செய்தது கிடையாது என்பது மிகச்சிறந்த விஷயம். மக்களே ஆட்சி புரிந்தனர். வரலாறும், அமெரிக்காவின் கொள்கைகளும் மக்கள் கைகளில் உள்ளது. இவ்வாறு பைடன் கூறினார்.

ஒபாமா பாராட்டு


ஜோ பைடன் முடிவுக்கு பாராட்டு தெரிவித்து முன்னாள் அதிபர் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த நாட்டின் புனிதமான நோக்கம் அனைவரையும் விட பெரியது. இந்த வார்த்தைக்கு, ஜோ பைடன், அமெரிக்க மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் பணியாற்றி உண்மையாக இருந்துள்ளார். அவருக்கு நன்றி. இவ்வாறு பதிவில் ஒபாமா கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us