வீடியோ போட்டு காட்டிய டிரம்ப்: மிரண்ட தென் ஆப்ரிக்க அதிபர்
வீடியோ போட்டு காட்டிய டிரம்ப்: மிரண்ட தென் ஆப்ரிக்க அதிபர்
வீடியோ போட்டு காட்டிய டிரம்ப்: மிரண்ட தென் ஆப்ரிக்க அதிபர்
ADDED : மே 23, 2025 01:27 AM

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய வந்த தென் ஆப்ரிக்க அதிபருக்கு, இனப்படுகொலை வீடியோ போட்டு காட்டி, அவரை தர்மசங்கடத்தில் நெளிய வைத்தார் அதிபர் டிரம்ப்.
தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோஸா, வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக பேச அமெரிக்கா வந்துள்ளார். அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு சந்தித்தார்.
ராமபோஸாவுடன் தென் ஆப்ரிக்க பிரதிநிதிகளும் வந்தனர். பேச்சுக்கு தயார் செய்து எடுத்து வந்த ஆவணங்களுடன் ராமபோஸா பேச துவங்கியதும், 'விளக்கை அணையுங்கள்' என்றார் டிரம்ப்.அந்த அறைக்குள் இருந்த 'டிவி'யில் வீடியோ ஒன்று ஓடத் துவங்கியது.
அதில், தென் ஆப்ரிக்க அரசியல்வாதிகள் சிலர், அந்நாட்டு வெள்ளையின விவசாயிகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பும் காட்சி அதில் இடம் பெற்றன.
மொத்தம் நான்கு நிமிடங்கள் ஓடிய அந்த வீடியோவில் வெள்ளையின தென் ஆப்ரிக்க விவசாயிகளுக்கு எதிரான சில படுகொலை காட்சிகளும் இடம் பெற்றன.
'இது மிகப்பெரிய கொடூரம். இதுபோன்ற காட்சிகளை நான் பார்த்ததில்லை' என, கூறிய டிரம்ப், இது தொடர்பாக ராமபோஸாவிடம் விளக்கம் கேட்டார்.
தென் ஆப்ரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடப்பதாக கூறப்படுவதை, சிரில் ராமபோஸா திட்டவட்டமாக மறுத்தார்.
உக்ரைன் அதிபர் வந்தபோது ஏற்பட்டதை போன்ற பரபரப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ராமபோஸா நிலைமையை நிதானமாக கையாண்டார்.
வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச வந்தவர்கள், டிரம்ப் செய்த அதிரடியால் தர்ம சங்கடத்தில் நெளிந்தபடி புறப்பட்டு சென்றனர்.