இத்தாலி சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு
இத்தாலி சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு
இத்தாலி சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு
UPDATED : ஜூன் 14, 2024 10:13 AM
ADDED : ஜூன் 14, 2024 05:35 AM

பஷானோ: 'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் எரிசக்தி, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆப்ரிக்க விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவித்தார்.
ஜி - 7 நாடுகளின் உச்சி மாநாடு இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் 13ம் தேதி துவங்கி 15-ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் -- காசா போர் ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, தன் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று இத்தாலி புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று நடக்கும் ஜி - 7 கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேசுகிறார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை:
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பின் பேரில் இன்று இத்தாலியில் நடக்கும் ஜி - 7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். கடந்த ஆண்டில் இத்தாலி பிரதமர் மெலோனி இருமுறை இந்தியா வந்திருந்தார். அந்த பயணம் இரு தரப்பு நாடுகளின் திட்டங்களை வேகப்படுத்தின. இந்தியா- - இத்தாலியின் உறவை பலப்படுத்துவதிலும், இந்தோ- - -பசிபிக் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். உச்சி மாநாட்டில் பங்கேற்கும் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்.
ஜி - 7 மாநாட்டின் கலந்துரையாடலின் போது, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்ரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் விவகாரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.