குவைத் தீ விபத்தில் இறந்த இந்தியர்கள் 45 பேர்! தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
குவைத் தீ விபத்தில் இறந்த இந்தியர்கள் 45 பேர்! தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
குவைத் தீ விபத்தில் இறந்த இந்தியர்கள் 45 பேர்! தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
UPDATED : ஜூன் 14, 2024 10:27 AM
ADDED : ஜூன் 14, 2024 02:27 AM

குவைத்: குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில், 45 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த ஏழு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடான குவைத்தின் மங்காப் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், என்.பி.டி.சி., என்ற கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 200 பேர் தங்கி உள்ளனர். இவர்கள் தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
ஏழு மாடிகளை உடைய அந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஏழு தமிழர்கள்
இந்த விபத்தில் 49 பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலை என்பதால் பலியானவர்களில் பெரும்பாலானோர் துாக்கத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் என்றும், மூன்று பேர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
ஒருவரின் உடல் அடையாளம் காணப்படவில்லை. விபத்து குறித்து உரிய விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு துணை பிரதமர் ஷேக் பகத் அல் யூசுப் அல் சபா மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாயா ஆகியோர், 'இறந்தவர்கள் உடல்களை விரைவில் இந்தியா அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தனர்.
தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விபத்தில் பலியான நிலையில், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், தமிழகத்தின் துாத்துக்குடியைச் சேர்ந்த மாரியப்பன், 41; திருச்சி ராஜு, 54; கடலுார் மாவட்டம் சின்னதுரை, 42; சென்னை சிவசங்கர், 50; பேராவூரணி புனாப்ரிச்சர்ட் ராய், 28; ராமநாதபுரம் மாவட்டம் ராமு, 60; செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிப், 37, என, ஏழு தமிழர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிவாரணம்
விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த ஏழு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். காயமடைந்தோருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
விபத்து குறித்து, தமிழக அமைச்சர் மஸ்தான் கூறியதாவது:
அயலகத் துறை சார்பில், இந்திய துாதரக உதவியுடன் மருத்துவமனையில் இருப்போருக்கு, தமிழ் சங்கத்துடன் இணைந்து மருத்துவ உதவிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களை அடையாளம் கண்டு, உறவினர்களிடம் ஒப்படைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, தரை தளத்தில் உள்ள செக்யூரிட்டி அறையில் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த விபத்தில், கேரளாவைச் சேர்ந்த 24 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். மேலும் ஏழு பேர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரண உதவியை கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்களான யூசுப் அலி மற்றும் ரவி பிள்ளை ஆகியோர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் மற்றும் 2 லட்சம் ரூபாய் வழங்குவதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன் வாயிலாக உயிரிழந்த கேரள தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு 12 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்கும்.