பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்தார் மனு பாகர்: பிரதமர் மோடி வாழ்த்து
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்தார் மனு பாகர்: பிரதமர் மோடி வாழ்த்து
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்தார் மனு பாகர்: பிரதமர் மோடி வாழ்த்து
UPDATED : ஜூலை 29, 2024 12:15 PM
ADDED : ஜூலை 28, 2024 04:15 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாகர் வெண்கலம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெண்கலம் ஆகும்.முதல் பதக்கத்தை வென்ற மனு பாகருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியாவின் மனு பாகர் பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடிய மனு பாகர், 221.7 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இது, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது. தவிர இவர், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார்.

12 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. கடைசியாக லண்டன் ஒலிம்பிக்கில் (2012) இந்திய வீரர் ககன் நரங் (10 மீ., 'ஏர் ரைபிள்') பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். இது, ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த 5வது பதக்கம். இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் கிடைத்துள்ளன.
முதலிரண்டு இடங்களை தென் கொரியாவின் ஓ யே ஜின் (243.2 புள்ளி), கிம் யேஜி (241.3) கைப்பற்றினர்.


குவிகிறது பாராட்டு
* ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாகரின் சாதனை பெண்களையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டியுள்ளார்.
* ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை மனு பாகருக்கு வாழ்த்துக்கள். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் என காங்., எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.
* ஹரியானாவின் வலிமையான மங்கை மனு பாகர் நாட்டையும், மாநிலத்தையும் பெருமைப்படுத்திவிட்டார் என முதல்வர் நயாப் சிங் தெரிவித்துள்ளார்.
சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாகரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பாராட்டினார்.