ஜெலன்ஸ்கியுடன் போனில் பேசினேன்; தொடர்ந்து பேசுவேன்: டிரம்ப்
ஜெலன்ஸ்கியுடன் போனில் பேசினேன்; தொடர்ந்து பேசுவேன்: டிரம்ப்
ஜெலன்ஸ்கியுடன் போனில் பேசினேன்; தொடர்ந்து பேசுவேன்: டிரம்ப்

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். போர் நிறுத்த முயற்சி சரியான முறையில் செல்வதாக டிரம்ப் கூறியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது.
இந்தப் போரை நிறுத்துவதற்கான முயற்சியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உடன் அவர் பல முறை பேசியுள்ளார்.
போரை நிறுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியது. இதன்படி, 30 நாட்களுக்கு போரை நிறுத்தும் திட்டத்தை டிரம்ப் அறிவித்தார். இதற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக் கொண்டார். ஆனால், புடின் அதை ஏற்கவில்லை.
நேற்று முன்தினம், டிரம்ப் மற்றும் புடின் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, டிரம்பின் திட்டத்தை பகுதியாக ஏற்பதாகவும், 30 நாட்களுக்கு உக்ரைனின் அணுசக்தி மற்றும் மின்சார அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதற்கிடையே, இந்த உறுதிமொழியை ரஷ்யா மீறியுள்ளதாக ஜெலன்ஸ்கி நேற்று குற்றஞ்சாட்டினார். தன் நாட்டின் அணு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், தங்களுடைய பெட்ரோலிய குழாய்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா கூறியுள்ளது.
இந்த சூழ்நிலையில், டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி, தொலைபேசி வாயிலாக நேற்று பேசினர். இதைத் தொடர்ந்து டிரம்ப் கூறியுள்ளதாவது:
இந்தப் பேச்சு சிறப்பாக அமைந்தது. புடினுடன் நடந்த பேச்சின் விபரங்கள் தொடர்பாக, ஜெலன்ஸ்கியிடம் விளக்கினேன். போர் நிறுத்த முயற்சிகள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாகவும் இரு தரப்புடன் தொடர்ந்து பேசப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.