'நெட்பிளிக்ஸ்' நிறுவனத்திடம் ரூ.95 கோடி மோசடி செய்த இயக்குநர்
'நெட்பிளிக்ஸ்' நிறுவனத்திடம் ரூ.95 கோடி மோசடி செய்த இயக்குநர்
'நெட்பிளிக்ஸ்' நிறுவனத்திடம் ரூ.95 கோடி மோசடி செய்த இயக்குநர்
ADDED : மார் 20, 2025 04:09 AM
நியூயார்க்: ஓ.டி.டி., தளத்துக்கான வலைத்தொடர் தயாரிப்புக்காக, 'நெட்பிளிக்ஸ்' வழங்கிய, 95 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஹாலிவுட் இயக்குநரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரைச் சேர்ந்தவர் ஹாலிவுட் இயக்குனர் கார்ல் ரின்ஷ். இவர், கெனு ரீவ்ஸ் நடிப்பில், 47 ரோனின் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதன் பின் பல விளம்பர படங்களை இயக்கி வந்தார்.
இந்நிலையில், திரைப்படம் மற்றும் வலைத்தொடர்களை வெளியிடும், 'நெட்பிளிக்ஸ்' ஓ.டி.டி., தளத்தை அணுகிய இயக்குனர் கார்ல் ரின்ஷ், தன்னிடம் அறிவியல் புனைக்கதை இருப்பதாக கூறியுள்ளார். அவரின் கதையை, 'ஒயிட் ஹார்ஸ்' என்ற பெயரில் தயாரிக்க நெட்பிளிக்ஸ் முன் வந்தது.
முதலில் 380 கோடி ரூபாயை நெட்பிளிக்ஸ் செலவிட்டது. பின், படத்தை எடுத்து முடிக்க கூடுதல் பணம் தேவை என்று ரின்ஷ் கூறியதால், மேலும் 95 கோடி ரூபாயை நெட்பிளிக்ஸ் வழங்கியது. ஆனால், அந்த கூடுதல் பணத்தை வைத்து பாதியில் நின்ற படத்தை எடுத்து முடிக்காமல் தன்னுடைய சொந்த செலவுகளுக்கு அந்த பணத்தை பயன்படுத்திஉள்ளார்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க நினைத்தவர், அதில் இரண்டு மாதங்களில் 48 கோடி ரூபாயை இழந்தார். எஞ்சிய பணத்தை கிரிப்டோகரன்சி சந்தையில் முதலீடு செய்தார். அதில் வந்த லாபத்தை தன் சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றி உள்ளார்.
மேலும் 16 கோடி ரூபாய்க்கு கிரெடிட் கார்டு பில்கள், 20 கோடி ரூபாய்க்கு சொகுசான ரோல்ஸ் ராய்ஸ் கார், 32 கோடி ரூபாய்க்கு வீட்டுக்கான ஆடம்பர பொருட்கள், 5.6 கோடி ரூபாய்க்கு கைக்கடிகாரம் என வாங்கி குவித்துள்ளார்.
இது தொடர்பாக நெட்பிளிக்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று இயக்குனர் கார்ல் ரின்ஷ் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாக கூறினார். இதையடுத்து, 86 லட்சம் ரூபாய் பிணைத்தொகையுடன் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.