பலுசிஸ்தான் பாகிஸ்தானுக்கு சொந்தம் இல்லை: விடுதலை அறிவித்த கிளர்ச்சி படைத்தலைவர்
பலுசிஸ்தான் பாகிஸ்தானுக்கு சொந்தம் இல்லை: விடுதலை அறிவித்த கிளர்ச்சி படைத்தலைவர்
பலுசிஸ்தான் பாகிஸ்தானுக்கு சொந்தம் இல்லை: விடுதலை அறிவித்த கிளர்ச்சி படைத்தலைவர்
ADDED : மே 14, 2025 10:06 PM

இஸ்லாமாபாத்: 'பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான்கிளர்ச்சி படையினர், தங்களுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் நடக்கிறது. இப்பகுதி மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபர்கள் திடீரென மாயமாவது. அவர்களுக்காக போராடுபவர்களை ஒடுக்குவது , கொடூர கொலைகள் என பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
இதனையடுத்து பாக்., ராணுவம் மீது, 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' என்ற கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ஏராளமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் திணறி வருகிறது. பலுசிஸ்தானின் பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதோடு, அரசு அலுவலகங்களில் பாக்., கொடியை அகற்றி விட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர். தங்களை தனி நாடாக அங்கீகரிக்கும்படி, இந்தியா மற்றும் ஐ.நா.,வுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பலுசிஸ்தான்களின் பிரதிநிதியான மிர் யார் பலோச் என்பவர், மனித உரிமை மீறல், வன்முறை மற்றும் மாயமாகும் அப்பாவி மக்கள் காரணமாக பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றுள்ளதாக அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவுகளில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பலுசிஸ்தானில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றனர். இனி பலுசிஸ்தான் பாகிஸ்தானுக்கு சொந்தமானது அல்ல என்பது அவர்களின் முடிவு. இனிமேல் உலகம் அமைதியாக இருக்க முடியாது.
இந்திய தேசபக்தி கொண்ட மீடியாக்கள், யூடியூபர்கள், இந்தியாவை பாதுகாக்க போராடுபவர்கள் பலுசிஸ்தானை சேர்ந்தவர்களை பாகிஸ்தான் மக்கள் என குறிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல. பலுசிஸ்தானியர்கள். பாகிஸ்தானுக்கு உட்பட்ட பஞ்சாப் மக்கள், வெடிகுண்டுகளையும், திடீரென மாயமாவதையும், இனப்படுகொலையையும் சந்தித்தது கிடையாது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன். டாகாவில் 93 ஆயிரம் ராணுவ வீரர்கள் சரணடைந்து பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட அவமானம் மீண்டும் ஏற்படாமல் இருக்க, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்த வேண்டும். பாகிஸ்தான் ராணுவத்தை தோற்கடிக்கும் திறமை இந்தியாவுக்கு உண்டு. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மனித கேடயங்களாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதால், அங்கு ரத்த ஆறு ஓடினால் அதற்கு பாகிஸ்தான்ராணுவ தளபதிகள் பொறுப்பு ஏற்க வேண்டும்.
பலுசிஸ்தான் விடுதலையை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். பலுசிஸ்தான் குறித்த பாகிஸ்தான் கட்டுக்கதைகளை சர்வதேச நாடுகள் இனியும் நம்பக்கூடாது. வெளிநாட்டு சக்திகள் உதவியுடன் வலுக்கட்டாயமாக பலுசிஸ்தானை பாகிஸ்தான் இணைத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.