Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ யாராவது தாக்கினால் இணைந்து செயல்படுவோம் ரஷ்யா - வட கொரியா அதிபர்கள் ஒப்பந்தம்

யாராவது தாக்கினால் இணைந்து செயல்படுவோம் ரஷ்யா - வட கொரியா அதிபர்கள் ஒப்பந்தம்

யாராவது தாக்கினால் இணைந்து செயல்படுவோம் ரஷ்யா - வட கொரியா அதிபர்கள் ஒப்பந்தம்

யாராவது தாக்கினால் இணைந்து செயல்படுவோம் ரஷ்யா - வட கொரியா அதிபர்கள் ஒப்பந்தம்

ADDED : ஜூன் 20, 2024 12:58 AM


Google News
Latest Tamil News
சியோல், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், தங்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள ரஷ்யா மற்றும் வட கொரியா, யாராவது தாக்குதல் நடத்தினால், ஒருவருக்கு ஒருவர் உதவிக்கரம் நீட்டுவது என்று ஒப்பந்தம் செய்துள்ளன.

ஆசிய நாடான வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, தொடர்ந்து அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பல புதிய ஏவுகணைகளை, அணு ஆயுதங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு அந்த நாடு நேரடியாக பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அணு ஆயுதம்

இதையடுத்து, வடகொரியாவுக்கு எதிராக, ஐ.நா., பொருளாதார தடை விதித்துள்ளது. அதுபோல பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இரும்பு கோட்டையாக விளங்கும் வட கொரியாவின் அசைக்க முடியாதத் தலைவராக கிம் ஜாங் உன் உள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், பொருளாதார தடையையும் விதித்துள்ளன. அந்த நாட்டின் அதிபராக, ஐந்தாவது முறையாக சமீபத்தில் பதவியேற்ற விளாடிமிர் புடின், மிகவும் வலுவானத் தலைவராக உள்ளார்.

உலக நாடுகள் பலவும் புறக்கணித்தாலும், இந்த இரு நாடுகளும் அதைப்பற்றி கவலைப்படாமல் செயல்பட்டு வருகின்றன. உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகொரியாவுக்கு, ரஷ்ய அதிபர் புடின் பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் அதற்கு தேவையான ஆயுதங்களை வட கொரியாவிடம் இருந்து பெறும் நோக்கத்துடன் இந்தப் பயணம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலாக, வட கொரியாவுக்கு, அணு ஆயுதங்கள் உள்ளிட்டவை தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை ரஷ்யா வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், நேற்று தனியாக சந்தித்துப் பேசினர். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இருவரும் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.

ராணுவ உதவி

இதைத் தொடர்ந்து, பொருளாதாரம், ராணுவத் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதுபோல, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தங்கள் மீது ஏதாவது தாக்குதல்கள் நடந்தால், பரஸ்பரம் ராணுவ உதவிகளை செய்வது என, இரு தரப்பும் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us