மெக்காவில் வெப்ப அலைக்கு ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் பலி
மெக்காவில் வெப்ப அலைக்கு ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் பலி
மெக்காவில் வெப்ப அலைக்கு ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் பலி
ADDED : ஜூன் 20, 2024 02:30 AM

மெக்கா, :கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்ட 550 பயணியர் பலியாகியுள்ளதாக சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவாகி வருவதால், அந்நாட்டு மக்களே செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள், குடைகளை பிடித்தபடி, தண்ணீர் அருந்தியபடி தங்கள் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.
சவுதி அரேபியா வானிலை மைய அறிக்கையின்படி, மெக்காவில் அல் ஹராம் பகுதியில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு சவுதியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரையின் போது சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அவர்களில் 323 பேர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 60 பேர் ஜோர்டான் நாட்டு மக்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களது உடல்கள் மெக்காவுக்கு அருகில் உள்ள அல் - மொயிசம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
ஹஜ் புனித யாத்திரைக்கு முறைப்படி விசா எடுத்து வரும் மக்களுக்கு குளிர்சாதன வசதி உட்பட வேண்டிய வசதிகளை சவுதி அரசு செய்கிறது. அவ்வாறு பதிவு செய்யாத மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருக்கும் காரணத்தாலும், உணவு, நீர், குளிர்சாதன வசதி மற்றும் முறையான தங்கும் வசதி இல்லாததாலும் அதிகம் பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.