வீட்டு நாய்க்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வேலைக்காரர்களுக்கு தினமும் ரூ.600 தொழிலதிபர் ஹிந்துஜா குடும்பம் மீது வழக்கு
வீட்டு நாய்க்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வேலைக்காரர்களுக்கு தினமும் ரூ.600 தொழிலதிபர் ஹிந்துஜா குடும்பம் மீது வழக்கு
வீட்டு நாய்க்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வேலைக்காரர்களுக்கு தினமும் ரூ.600 தொழிலதிபர் ஹிந்துஜா குடும்பம் மீது வழக்கு
ADDED : ஜூன் 20, 2024 12:57 AM
லண்டன், பிரிட்டனில் வசிக்கும்ஹிந்துஜா தொழிலதிபர்குடும்பத்தினர் மனித கடத்தல் வழக்கில் சிக்கிய நிலையில், வீட்டு வேலைக்காரர்களுக்கு செல்லப்பிராணிகளை விட குறைந்த ஊதியம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியான கோபிசந்த் ஹிந்துஜா, வங்கி, எண்ணெய் வர்த்தகம் உட்பட பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரின் சகோதரர்களில் ஒருவரான பிரகாஷ், ஹிந்துஜா குழுமத்தின் பல்வேறு பணிகளை கவனித்து வருகிறார்.
ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தில் உள்ள இவரின் மாளிகையில் வேலை செய்த இந்திய பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் ஏமாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் மூன்று இந்திய தொழிலாளர்கள் மனு தாக்கல் செய்ததை அடுத்து, ஹிந்துஜா குடும்பத்தினர் மீது மனித கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், நாளொன்றுக்கு 15 முதல் 18 மணி நேரம் வேலை செய்த தங்களுக்கு ஏழு ஸ்விஸ் பிராங்க்ஸ் அதாவது இந்திய மதிப்பில் 660 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாகக் கூறியிருந்தனர்.
அதுமட்டுமின்றி தங்களின் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் அடிமைகள் போல் நடத்தியதாக குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹிந்துஜா குடும்பத்தில் பிரகாஷ் -கமல் ஹிந்துஜா தம்பதி, அவர்களது மகன் அஜய், மனைவி நம்ரதா ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்திய தொழிலாளர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அதை ஹிந்துஜா குடும்பத்தினர் மறுத்தனர். அப்போது தொழிலாளர்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் கூறியதாவது:
மாளிகையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கான சம்பளம், இந்தியாவில் வசிக்கும் அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் தொழிலாளர்களின் கையிருப்புக்கு எந்த பணமும் வழங்கப்படவில்லை. அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேற தடையும் விதிக்கப்பட்டது.
வீட்டு செல்லப்பிராணியான நாய்க்கு ஆண்டுதோறும் 8 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது. ஆனால், ஊழியர்களுக்கு நாள்தோறும் 660 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வழக்கில், அவர்களுக்கு ஊதியம் தவிர, தங்கும் இடம், உணவு உள்ளிட்டவை ஹிந்துஜா குடும்பத்தினரால் கொடுக்கப்பட்டது என்றும், ஊதியத்தை மட்டும் இங்கு கணக்கிடக் கூடாது என்றும் ஹிந்துஜா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்த வழக்கில் 33 கோடி ரூபாய் வரை தொழிலாளர்கள் தரப்பில் இழப்பீடு கோரப்பட்டது. ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறைத் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.