துப்பாக்கிச் சூடு: செய்தியாளர்களிடம் டிரம்ப் உருக்கம்
துப்பாக்கிச் சூடு: செய்தியாளர்களிடம் டிரம்ப் உருக்கம்
துப்பாக்கிச் சூடு: செய்தியாளர்களிடம் டிரம்ப் உருக்கம்
ADDED : ஜூலை 16, 2024 01:24 AM

மில்வாக்கி: துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின், முதல்முறையாக செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப் கூறியதாவது:நான் இந்நேரம் இறந்திருப்பேன். சரியான நேரத்தில் தலையை திருப்பியதால் தான் உயிர் தப்பினேன். இல்லையெனில் காதை உரசிச் சென்ற தோட்டா, என் தலையை துளைத்திருக்கும். ஒட்டுமொத்த நிகழ்வுமே மாய யதார்த்தம் போல் உள்ளது.சிகிச்சை அளித்த டாக்டர் மிரண்டு போனார்
. இது நிச்சயமாக ஒரு அதிசயம் என வியந்தார். நான் உயிர் தப்பியதை அதிர்ஷ்டம் என்றோ, கடவுளின் அருள் என்றோ கூறலாம். தேர்தல் எதிரியாக இருந்தாலும் என்னை அழைத்து நலம் விசாரித்த அதிபர் பைடனின் செயல் பாராட்டுக்குரியது.இவ்வாறு அவர் கூறினார்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் தனி ஆளாகவே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக, எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்டு டிரம்ப், 78, பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் என்ற இடத்தில் கடந்த 13ம் தேதி மாலை பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.
பிரசார மேடையில் இருந்து சில நுாறு அடி தொலைவில் உள்ள கட்டடத்தில் மறைந்திருந்த நபர், டிரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். தோட்டாக்கள் டிரம்பின் வலது காதை உரசிச் சென்றது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்; காதில் காயம் ஏற்பட்டு முகத்தில் ரத்தம் வழிந்தது.
அவரை பத்திரமாக மீட்ட பாதுகாவலர்கள் மேடையை விட்டு பாதுகாப்பாக அழைத்து சென்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அப்போதே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில், மேடைக்கு பின்னால் இருந்த ஒருவர் உயிரிழந்தார்; இருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிரம்பை சுட்டவர் பெயர் தாமஸ் மேத்யூ குரூக்ஸ், 20, என தெரிய வந்தது. அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவரது வீட்டை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து, எப்.பி.ஐ.,யின் உதவி இயக்குனர் ராபர்ட் வெல்ஸ் கூறியதாவது:
இதுவரை நடந்த விசாரணையில், குற்றவாளி குரூக்ஸ் தனியாளாகவே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. இதை, உள்நாட்டு பயங்கரவாத செயல் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.
பயங்கரவாத தடுப்பு படையினரும் விசாரணையில் உதவி வருகின்றனர். குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது தெரியவில்லை.
அவரது சமூக வலைதள பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். கொலை முயற்சிக்கான நோக்கம் குறித்து இன்னும் தெரியவில்லை. அவர் பள்ளியில் படித்தபோது, துப்பாக்கி சுடும் பயிற்சி, 'ரைபிள்' பிரிவில் சேர விரும்பியதாகவும், ஆனால், துல்லியமாக சுடத் தெரியவில்லை என கூறி, அவருக்கு அந்த பிரிவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தகவலும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்பை அறிவிக்கும் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு, விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி நகரில் நேற்று துவங்கியது.
இதில் பங்கேற்பதற்காக முன்னாள் அதிபர் டிரம்ப் மில்வாக்கிக்கு சென்றுள்ளார். காதில் காயம் ஏற்பட்ட பகுதியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கட்டு போடப்பட்டுள்ளது எனவே, டிரம்பை புகைப்படம் எடுக்க குடியரசு கட்சியினர் அனுமதி மறுத்து உள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் தேசிய மாநாட்டில் மாற்றம் எதுவும் இருக்காது. திட்டமிட்டபடி அதிபர் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்படுவார் என, குடியரசு கட்சி தலைவர்கள் தெரிவித்துள்னர்.
டிரம்பின் வலது காதில் துப்பாக்கி தோட்டா உரசி சென்ற இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அந்த இடத்தில், 'ஸ்கேன்' பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பாதிப்பு எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.