ஜாபர் சாதிக்கிற்கு காவல்: புழல் சிறையில் அடைப்பு
ஜாபர் சாதிக்கிற்கு காவல்: புழல் சிறையில் அடைப்பு
ஜாபர் சாதிக்கிற்கு காவல்: புழல் சிறையில் அடைப்பு
ADDED : ஜூலை 16, 2024 01:32 AM

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை வழக்கில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை, வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை, டில்லியில் என்.சி.பி., என்ற மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், கடந்த மார்ச்சில் கைது செய்தனர்.
டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், போதைப் பொருட்கள் விற்பனை வாயிலாக கிடைத்த பணத்தை, சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகக் கூறி, அவர் மீது அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கில், ஜாபர் சாதிக்கை கடந்த மாதம் 26ல் அமலாக்கத் துறை கைது செய்தது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு டில்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கிய போதும், அமலாக்கத் துறை இவ்வழக்கை காரணம் காட்டியதால், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
அமலாக்கத்துறை வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, ஜாபர் சாதிக்கை டில்லியில் இருந்து ரயிலில் நேற்று அழைத்து வந்தனர். பின், முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை வரும் 29 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.