ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கான அனுமதியை ஏன் ரத்து செய்ய கூடாது? மாநில சுற்றுச்சூழல் ஆணையம் கேள்வி
ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கான அனுமதியை ஏன் ரத்து செய்ய கூடாது? மாநில சுற்றுச்சூழல் ஆணையம் கேள்வி
ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கான அனுமதியை ஏன் ரத்து செய்ய கூடாது? மாநில சுற்றுச்சூழல் ஆணையம் கேள்வி
ADDED : செப் 11, 2025 01:49 AM
சென்னை:'ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை, ஏன் ரத்து செய்யக் கூடாது' என கேட்டு, ஓ.என்.ஜி.சி., எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 2020 பிப்ரவரி 20ல், காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்து, சட்டம் இயற்றியது.
அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலுார் மாவட்டங்களில், குறிப்பிட்ட பகுதிகளில், புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன், ஷேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்து ஆய்வு நடத்தவும், எடுக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில், ஹைட்ரோகார்பன் இருப்பு குறித்து ஆய்வு நடத்த, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது.
இதற்கு ராமநாதபுரம் மாவட்ட மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதைத் தொடர்ந்து, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஹைட்ரோகார்பன் ஆய்வு நடத்த, ஓ.என்.ஜி.சி.,க்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெறுமாறு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதை ஏற்று, அனுமதியை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை ஆணையம் துவக்கி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், ஹைட்ரோகார்பன் ஆய்வு நடத்த அளிக்கப்பட்ட அனுமதியை, ஏன் ரத்து செய்யக் கூடாது எனக் கேட்டு, ஓ.என்.ஜி.சி.,க்கு, ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.