ADDED : செப் 11, 2025 01:48 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே, கிணற்றில் தத்தளித்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம், பஜனை கோவில் மூன்றாவது தெருவிலுள்ள பொது கிணற்றில், ஆண் ஒருவர் கிடப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறை மூலமாக, மறைமலை நகர் தீயணைப்புத் துறையினருக்கு, நேற்று காலை தகவல் வந்தது.
இதையடுத்து, கிணற்றில் தத்தளித்த நபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு, கூடுவாஞ்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, கூடுவாஞ்சேரி போலீசார் கூறியதாவது:
முதற்கட்ட விசாரணையில் அந்த நபர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர், 30, என தெரிந்தது.
பெருங்களத்துாரில் வசிக்கும் தன் மனைவியைப் பார்க்க ரயிலில் வந்த பாஸ்கர், நேற்று காலை பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளார்.
பின், அந்த பகுதியில் சிறிது நேரம் சுற்றித் திரிந்த அவர், தைலாவரத்தில் உள்ள பொது கிணற்றில் இறங்கி குளித்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், கிணற்றின் உள்ளேயே நான்கு மணி நேரம் இருந்துள்ளார்.
கிணற்றுக்குள் இருந்த பாஸ்கரை பார்த்த அங்கிருந்தோர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.