தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்: மார்க்சிஸ்ட் கட்சி திட்டவட்டம்
தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்: மார்க்சிஸ்ட் கட்சி திட்டவட்டம்
தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்: மார்க்சிஸ்ட் கட்சி திட்டவட்டம்
ADDED : ஜூன் 10, 2025 03:15 PM

சென்னை: 'வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்' என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மா.கம்யூ., மாநிலச் செயலாளர் சண்முகம் அளித்த பேட்டி: கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடைசியாக உடன்பாட்டில் கையெழுத்திட்டது மார்க்சிஸ்ட் கட்சி தான். 6 தொகுதிகள் என்பது மிகவும் குறைவு. இவ்வளவு குறைவான தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி இதுவரை போட்டியிட்டது கிடையாது.
ஆகவே கட்சி உறுப்பினர்கள் மத்தியில், மிகப்பெரிய அதிருப்தி இருந்தது. அத்தகைய நிலையில் தான் கூடுதலான தொகுதிகளை பெற வேண்டும் என்று கடுமையான முயற்சியில் ஈடுபட்டோம்.
கடைசியாக அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று விடக்கூடாது என்கிற கண்ணோட்டத்தில் தான் அது குறைவான தொகுதியாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு இந்த கூட்டணியில் பயணிக்கலாம் என்ற முடிவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வந்தது. ஆகவே அதேபோல் ஒரு நிலையை 2026ம் ஆண்டிலும் மேற்கொள்ள முடியாது.
ஆகவே 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சி கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும். தமிழக சட்டசபையில் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர வேண்டும் என்பது எங்கள் கட்சியின் முடிவு. அந்த முடிவை தான் நாங்கள் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். தி.மு.க., தலைமையிடம் பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் கூடுதலான தொகுதியில் போட்டியிடுவதற்கான அனைத்து முயற்சியையும் மேற்கொள்வோம். தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்.2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நாங்கள் போட்டியிட்டது திருப்திகரமாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க.,வுக்கு நல்லது!
முன்னதாக, நாளிதழ் ஒன்றுக்கு சண்முகம் அளித்த பேட்டி: கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., கொடுத்த குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். ஆனால் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
2026ம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் மாநாட்டுத் தீர்மானம்; விட்டுக் கொடுப்பது தி.மு.க., தலைமைக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.