Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'இளைய காமராஜர்' பட்டம் வேண்டாம்' என்கிறார் விஜய்

'இளைய காமராஜர்' பட்டம் வேண்டாம்' என்கிறார் விஜய்

'இளைய காமராஜர்' பட்டம் வேண்டாம்' என்கிறார் விஜய்

'இளைய காமராஜர்' பட்டம் வேண்டாம்' என்கிறார் விஜய்

Latest Tamil News
சென்னை: காமராஜர், இளைய காமராஜர் என, தன்னை அழைக்க வேண்டாம் என த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவியருக்கு, த.வெ.க., சார்பில், மூன்றாம் கட்ட விருது வழங்கும் விழா, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், நேற்று நடந்தது.

மாணவ - மாணவியருக்கு விருதுகள் வழங்கி, அவர்களின் பெற்றோர், குடும்பத்தினருடன், த.வெ.க., தலைவர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், “இங்கு வந்திருப்போர் மட்டுமல்ல; வராமால் இருக்கும் கட்சியினர் அனைவரும் கூட பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். “வரும் 2026 சட்டசபை தேர்தல் குறித்தும், என்னை 'காமராஜர்', 'இளைய காமராஜர்' என பட்டம் சூட்டியும் யாரும் பேச வேண்டாம். தாங்கள் படித்த பள்ளி, ஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் பேசலாம்,” என்றார்.

விருது வழங்கும் நிகழ்ச்சிகளில், மாணவியருடன் தோள் மீது கை போட்டு வாழ்த்துவது தொடர்பாக, விஜயையும் அனுமதித்த மாணவியரையும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், விருது பெற்ற மாணவி ஒருவர், நேற்று பேசினார்.

அவர் பேசுகையில், “எங்களுடன் தோள் மீது கைபோட்டு விஜய் புகைப்படம் எடுப்பதை விமர்சிக்கின்றனர். விஜயை தாய் மாமனாகவும், அப்பாவாகவும், அண்ணனாகவும், உயிராகவும் பார்க்கிறோம்.

“இப்படி விமர்சிப்போர் குடும்பத்தில் இருந்து யாராவது, நடிகர் விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டால், அவர்களையும் இப்படித்தான் விமர்சிப்பரா,'' என்றார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து, பரந்துார் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் விஜயை சந்தித்து, தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக, நன்றி தெரிவித்தனர்.

இதுபோல, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள், விஜயை சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, தாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி விஜயிடம் கேட்டுக் கொண்டனர்.

''தேவையானால், உங்கள் போராட்டத்தில் நானும் பங்கேற்பேன்,'' என, விஜய் உறுதியளித்து, அவர்களை அனுப்பி வைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us