அண்ணாமலை குறித்து வேலுமணி கருத்து அதிமுக.,வின் கருத்து அல்ல: ஜெயக்குமார் பேட்டி
அண்ணாமலை குறித்து வேலுமணி கருத்து அதிமுக.,வின் கருத்து அல்ல: ஜெயக்குமார் பேட்டி
அண்ணாமலை குறித்து வேலுமணி கருத்து அதிமுக.,வின் கருத்து அல்ல: ஜெயக்குமார் பேட்டி
UPDATED : ஜூன் 07, 2024 05:47 PM
ADDED : ஜூன் 07, 2024 03:06 PM

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்த கருத்து அ.தி.மு.க.,வின் கருத்து அல்ல என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கோவையில் நேற்று( ஜூன் 06) நிருபர்களிடம் பேசிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‛‛அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையே காரணம் எனவும், கூட்டணி முறியாமல் இருந்து இருந்தால் 30 முதல் 35 இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம் '' எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணாமலை குறித்த வேலுமணியின் கருத்து, அவரின் சொந்த கருத்து. அ.தி.மு.க.,வின் கருத்து அல்ல. அனுமானத்தின் அடிப்படையில் அவர் பேசி உள்ளார். இப்போது மட்டும் அல்ல, 2026 சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., உடன் கூட்டணி கிடையாது என்பதே அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு. தண்ணீரும், இலையும் எப்போதும் ஒட்டாது.
எங்களது தலைவர்களை விமர்சனம் செய்தவர்களை தான் நாங்கள் விமர்சனம் செய்தோம். அண்ணாமலை இலவு காத்த கிளி போல் காத்து கொண்டிருக்க வேண்டியது தான். பா.ஜ.,வால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.
அண்ணாமலை ஒரு புள்ளி ராஜா ஆகிவிட்டார். எதற்கு எடுத்தாலும் புள்ளி விவரங்களைக் கூறி வருகிறார். யார் யார் எவ்வளவு ஓட்டு வாங்கினார்கள் என்ற விவரங்களைக் கூறுகிறார். இதுபோன்ற புள்ளி விவரங்களை எடுக்கும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாகத்தான் அவர் செயல்பட்டாரே தவிர ஒரு கட்சியின் தலைவராக அவருடைய பேச்சுகள் இல்லை.
அதிமுக.,வுக்கு டெபாசிட் போய்விட்டது அது இது என கதையைக் கட்டுவதை விட, பாஜ.,வின் வளர்ச்சி என்னவென்று பார்த்தால் ஒரு வளர்ச்சியும் கிடையாது. ஐபிஎல் கிரிக்கெட்டில் தோற்றுக் கொண்டே இருக்கும் பெங்களூரு அணியை போன்றது பாஜ., அனால், அதிமுக சென்னை அணி. இனி வரும் தேர்தலில் வெற்றிகளை குவிப்போம்.இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.