''அரசை நடத்த பெரும்பான்மையை விட, ஒருமித்த கருத்தே முக்கியம்'': பிரதமர் மோடி பேச்சு
''அரசை நடத்த பெரும்பான்மையை விட, ஒருமித்த கருத்தே முக்கியம்'': பிரதமர் மோடி பேச்சு
''அரசை நடத்த பெரும்பான்மையை விட, ஒருமித்த கருத்தே முக்கியம்'': பிரதமர் மோடி பேச்சு

பொறுப்பாளியாக உணர்கிறேன்
இந்தியாவின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்பதை பாக்கியமாக கருதுகிறேன். 2019ல் எனக்கு கிடைத்த நம்பிக்கை இப்போதும் கிடைத்துள்ளது. இந்தியாவில் 22 மாநிலங்களில் தே.ஜ., கூட்டணி வெற்றித்தடம் பதித்துள்ளது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 10 மாநிலங்களில் 7ல் நம் கூட்டணிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. தே.ஜ., கூட்டணிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் நான் பொறுப்பாளியாக உணர்கிறேன். இந்த கூட்டணி கட்சிகளுக்குள் அசைக்க முடியாத பந்தம் உள்ளது. இது ஆட்சிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல; தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட கூட்டணி.
தேசமே முதன்மை
ஒட்டுமொத்த தேசத்தின் விருப்பத்தை தே.ஜ., கூட்டணி பிரதிபலிக்கிறது. வாஜ்பாய், ஜார்ஜ் பெர்ணாண்டஸ், பால் தாக்கரே, தேஜ., கூட்டணிக்கு வித்திட்டனர். தேஜ., என்றால் சிறந்த நிர்வாகம் என்று பொருள். தேசமே முதன்மையானது; நாட்டின் வளர்ச்சிக்காக எந்த சமரசமும் செய்ய மாட்டேன். நாட்டை வழிநடத்த ஒருங்கிணைந்து செயல்படுவது முக்கியமானது. அரசை நடத்த பெரும்பான்மை பலம் அவசியமில்லை; ஒருமித்த கருத்துதான் முக்கியம். கூட்டணி கட்சிகளுடன் ஒருமித்த முடிவுகளை எட்டுவதோடு, கூட்டணி தர்ம அடிப்படையில் இந்த கூட்டணி ஆட்சி செய்யும்.
அனைத்து மதங்களும் சமம்
அரசியல் சாசனப்படி அனைத்து மதங்களும் சமமானவை என்பதால், அனைவருக்குமான ஆட்சி நடத்துவதில் தேஜ., கூட்டணி உறுதியாக உள்ளது. அதிகார ஆசையில் இருக்கும் ஒரு சிறு குழு தான் 'இண்டியா' கூட்டணி. இது தற்போது உடையத் துவங்கியுள்ளது. சிறந்த நிர்வாகத்திற்கு சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ்குமாரும் சிறந்த உதாரணம். தேஜ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சமமானவை. ஏழ்மையை நாட்டில் இருந்து விரட்டுவதே எங்கள் இலக்கு.
இமாலய வெற்றி
ஓட்டுப்பதிவு இயந்திரம் பற்றி வதந்தி பரப்பிய எதிர்க்கட்சிகளின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சந்தேகம் எழுப்பியவர்கள் தற்போது மவுனமாகிவிட்டனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் 100 ஆண்டுகள் பழைய சிந்தனையுடன் செயல்பட்டது. 'ஜனநாயகத்தின் தாய் இந்தியா' என பா.ஜ,., சொல்கிறது. ஆனால் ஜனநாயகம் செத்துவிட்டது என காங்கிரஸ் விமர்சிக்கிறது. இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகள் தே.ஜ., கூட்டணி தான் ஆட்சியில் இருக்கும்.தேஜ கூட்டணிக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றி சாதாரணமானது அல்ல, இமாலய வெற்றி.
தோற்க மாட்டோம்
நாங்கள் தோற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர். நாங்கள் தோற்கவும் இல்லை; தோற்கவும் மாட்டோம்.காங்கிரசால் 10 ஆண்டுகள் ஆகியும் 100 இடங்களை கூட கைப்பற்ற முடியவில்லை. குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர்க்கட்சிகள் எதற்கு கொண்டாடுகின்றனர் எனத் தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., நடத்திய ஆட்சி வெறும் டிரைலர் தான். தே.ஜ., கூட்டணியின் என்.டி.ஏ என்பதில் 'என்' புதிய இந்தியா, 'டி' வளர்ச்சியடைந்த இந்தியா, 'ஏ' லட்சியமிக்க இந்தியா என்பதே பொருள். தோற்றவர்களை விமர்சிப்பதும், அவமதிப்பதும் நம் கலாசாரம் இல்லை. இந்த தேர்தலில் வென்ற எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கும் வாழ்த்துகள்.