மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி எதிரொலி: புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்
மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி எதிரொலி: புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்
மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி எதிரொலி: புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்
ADDED : ஜூன் 07, 2024 03:48 PM

மும்பை: பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில், இன்று (ஜூன் 7) தே.ஜ., கூட்டணியின் பார்லி., குழு தலைவராகவும் பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியது.
லோக்சபா தேர்தல் முடிந்து பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ., ஆட்சியே தொடரும் என வந்ததால், தேர்தல் முடிவுக்கு முன்னதாக உள்நாட்டு பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. ஓட்டு எண்ணிக்கையின்போது பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பங்குச்சந்தைகள் சற்று வீழ்ச்சியை சந்தித்தன. பின்னர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக மீண்டும் மோடியே தொடர்வது உறுதியானது.
மத்தியில் ஆட்சியில் நரேந்திர மோடி நீடிப்பதால் உற்சாகமடைந்துள்ள உள்நாட்டு பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தை கண்டுவருகின்றன. இன்று தே.ஜ., கூட்டணியின் பார்லி., குழு தலைவராகவும் பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து 3வது முறையாக ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். இதனையடுத்து காலையில் சென்செக்ஸ் குறியீடு 75,074 புள்ளிகளுடன் துவங்கிய வர்த்தகம், மாலை 3:10 மணியளவில் 76,752.33 புள்ளிகளாக புதிய உச்சத்தை எட்டியது.
இன்று வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,618.85 புள்ளிகள் அதிகரித்து 76,693.36 ஆகவும், நிப்டி 468.75 புள்ளிகள் உயர்ந்து 23,290.15 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.