மக்கள் மீது மின்சார தீவிரவாதம் கட்டவிழ்ப்பு: அன்புமணி குற்றச்சாட்டு
மக்கள் மீது மின்சார தீவிரவாதம் கட்டவிழ்ப்பு: அன்புமணி குற்றச்சாட்டு
மக்கள் மீது மின்சார தீவிரவாதம் கட்டவிழ்ப்பு: அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 19, 2024 01:02 PM

சென்னை: ‛‛ மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது'' என்று, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எழும்பூரில் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திறமையற்ற அரசு
இதில், அன்புமணி பேசியதாவது: கடந்த 23 மாதங்களில் 3 முறை மின்கட்டணத்தை தி.மு.க., அரசு உயர்த்தி உள்ளது. 33.7% அளவு உயர்ந்து உள்ளது. இது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ள அராஜகம். மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது. மின்கட்டணம் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால், இன்னும் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகின்றனர். இது மிகபெரிய மோசடி. தமிழகத்தில், லஞ்சம், ஊழல் நிர்வாகத் திறமையற்ற அரசு உள்ளது.
போராட அழைப்பு
தமிழகத்தில் மின் உற்பத்தியை இவர்கள் நிறுத்திவிட்டனர். தனியார் நிறுவனத்திடம் அதிக கட்டணம் கொடுத்து மின்சாரம் வாங்குகின்றனர். இதன் மூலம் அதிக கமிஷன் பெறுகின்றனர். அரசு சார்பில் மின் திட்டங்கள் நிலுவையில் உள்ளது. 17,300 மெகாவாட் உற்பத்தி செய்ய வேண்டும்.
கமிஷன் கிடைப்பதால், மின்உற்பத்தி செய்யவில்லை. மின்கட்டண உயர்வால் சிறுகுறு தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் இனி பொறுக்கக்கூடாது. சாலைகளுக்கு வந்து போராடினால், தான் கட்டணத்தை திரும்ப பெறுவார்கள். நிர்வாக திறமையற்ற காரணத்தினால், அவர்களின் ஊழலால் பொது மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படணுமா? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., தோற்று இருந்தால் மின்கட்டணத்தை உயர்த்தி இருக்க மாட்டார்கள். இவ்வாறு அன்புமணி பேசினார்.