சீமான் மீது நடிகை அளித்த புகார்; வரும் 12ல் உச்ச நீதிமன்றம் விசாரணை
சீமான் மீது நடிகை அளித்த புகார்; வரும் 12ல் உச்ச நீதிமன்றம் விசாரணை
சீமான் மீது நடிகை அளித்த புகார்; வரும் 12ல் உச்ச நீதிமன்றம் விசாரணை
ADDED : செப் 10, 2025 06:28 AM

'நடிகை விஜயலட்சுமி கூறிய புகாருக்கு எதிராக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த வழக்கு, வரும் 12ல் விசாரிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, 2011ல் போலீசில் புகார் அளித்தார். இந்திய தண்டனைச் சட்டம் 376வது பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கிற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், நடிகை கொடுத்த புகாரின் மீது, 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, பிப்., 21ல் அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்தார். இதை கடந்த மார்ச் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இரு தரப்பும் அமர்ந்து பேசி முடிவுக்கு வர அறிவுறுத்தியது.
அடுத்த விசாரணை நடக்கும் வரை, சீமானுக்கு எதிரான வழக்கின் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.ஆனால், 'சமரசத்துக்கு தயாராக இல்லை' என, விஜயலட்சுமி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், இந்த வழக்கு விசாரணை நடக்கவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கை பட்டியலிட்டு விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கும்படி, சீமான் தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'வரும் 12ல் வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும்' என தெரிவித்தனர்.
-- டில்லி சிறப்பு நிருபர் -