அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னை; தி.மு.க.,வே காரணம்: பா.ஜ.,
அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னை; தி.மு.க.,வே காரணம்: பா.ஜ.,
அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னை; தி.மு.க.,வே காரணம்: பா.ஜ.,
ADDED : செப் 10, 2025 06:29 AM

துாத்துக்குடி: “கூட்டணியில் இருப்போர் பிரிந்து செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஒன்றுசேர வேண்டும் என்பதற்காக அனைவருடனும் பேசி வருகிறேன்,” என தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் கூறினார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டில்லி சென்றது எதற்காக என எனக்குத் தெரியாது.
கடந்த 2016, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் குறித்து, இப்போது பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
தே.ஜ., கூட்டணியில் இருந்து யாரெல்லாம் விலகி உள்ளனரோ, அவர்களெல்லாம் மீண்டும் கூட்டணிக்கு திரும்ப வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறேன். தேவைப்பட்டால், அவர்களிடம் பேசவும், நேரில் சென்று அதை வலியுறுத்தவும் தயாராக உள்ளேன்.
தமிழகம் முழுதும் துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தேர்தலின்போது வாக்குறுதி அளித்துத்தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அதை செய்யவில்லை. அதனால், அவர்கள் போராடினர். அதற்காக, அவர்களை நசுக்கும் வேலையை செய்கிறது தி.மு.க., அரசு.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க., உள்ளது. அதனால், அக்கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை எங்களால் உடனடியாக சந்திக்க முடியாது.
தமிழகத்தில், எதிர்க்கட்சிகளுக்குள் பிரச்னை வெடிப்பதன் பின்னணியில் தி.மு.க.,வே உள்ளது. வரும் 11ல் டில்லி செல்ல உள்ளேன். அங்கு, கட்சியின் மூத்த தலைவர்களை சந்திப்பேன். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.