'ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசே நிதி ஒதுக்க வேண்டும்'
'ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசே நிதி ஒதுக்க வேண்டும்'
'ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசே நிதி ஒதுக்க வேண்டும்'
ADDED : ஜூன் 16, 2025 03:54 AM

சென்னை: 'ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசே நிதி ஒதுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஏழை, எளிய மாணவர்கள் யாரிடமும் கையேந்தாமல், கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான், ஆர்.டி.இ., எனப்படும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.
அதன்படி, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். மேலும், 1 லட்சம் குழந்தைகள், எல்.கே.ஜி., படித்து வருகின்றனர்.
இவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழக அரசே செலுத்தும். அ.தி.மு.க., ஆட்சியில், இத்தொகை முழுமையாகவும், முறையாகவும் செலுத்தப்பட்டு வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மூன்றாவது வாரத்திலிருந்து, ஒரு மாதம் இணையதளத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். மே மாத இறுதியில் ஒவ்வொரு பள்ளியிலும் குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
ஆனால், இந்த ஆண்டு மே மாத இறுதி வரை, ஆர்.டி.இ., மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் திறக்கப்படவேயில்லை. இதுபற்றி, அ.தி.மு.க., கேள்வி எழுப்பியதும், 'ஆர்.டி.இ., திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்கினால் தான், மாணவர் சேர்க்கை நடக்கும்' என, பொறுப்பற்ற முறையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், ஆர்.டி.இ., மாணவர்களுக்கான கல்வி கட்டண நிலுவையை செலுத்துமாறு, தனியார் பள்ளிகள் வலியுறுத்துகின்றன. இதனால் ஏழை, எளிய பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
எனவே, மத்திய அரசு பணம் தரவில்லை என தட்டிக்கழிக்காமல், உடனடியாக மாநில நிதியில் இருந்து, இத்திட்டத்திற்கான நிதியை விடுவித்து, கட்டணமின்றி படிக்க வகை செய்யும் 25 சதவீத மாணவர் சேர்க்கையை உடனடியாக முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.