'வரும் முன் காப்போம்' திட்டம் இனி ‛நலம் காக்கும் ஸ்டாலின்' தேர்தலுக்காக பெயர் மாற்றம்
'வரும் முன் காப்போம்' திட்டம் இனி ‛நலம் காக்கும் ஸ்டாலின்' தேர்தலுக்காக பெயர் மாற்றம்
'வரும் முன் காப்போம்' திட்டம் இனி ‛நலம் காக்கும் ஸ்டாலின்' தேர்தலுக்காக பெயர் மாற்றம்
ADDED : ஜூன் 11, 2025 01:34 AM
விருதுநகர்:தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள 'வரும் முன் காப்போம்' திட்டம் 'நலம் காக்கும் ஸ்டாலின்' என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. சட்டசபை தேர்தலுக்காக திட்டத்தின் பெயரை மாற்றம் செய்து செயல்படுத்துவதற்கான பணிகள் நடக்கிறது.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1999ம் ஆண்டு'வரும் முன் காப்போம்' திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டம் முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்றதும் 2021ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 5654 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியதில் 52.87 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். மேலும் 2025 -- 26ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் சேவைகளை விரிவுபடுத்தி மாநிலம் முழுவதும் 1256 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இலவச முகாம்களில் 17 சிறப்பு மருத்துவ சேவைகள், 30 நோயறிதல் பரிசோதனைகள் செய்யப்படும். இதில் இதய பராமரிப்பு, மகப்பேறு மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை, புற்றுநோய் பரிசோதனைகள், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்டவற்றில் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
இது போன்ற மருத்துவ முகாம்கள் நகர், புறநகர், கிராமங்களில் உள்ள மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருப்பது தரவுகள் அடிப்படையில் தெரிந்துள்ளது. இதனால் ‛வருமுன் காப்போம்' திட்டத்தை ‛நலம் காக்கும் ஸ்டாலின்' என பெயர் மாற்றம் செய்து தொடர்ந்து விரிவுபடுத்தி செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால் தற்போது திட்டத்தின் பெயரை மாற்றினால் விளம்பரம் செய்து மக்களிடம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அமையும் என திட்டமிட்டு இந்த பெயர் மாற்றத்தை அடுத்த மாதம் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.