அபராதத்துக்கு தவணை அவகாசம் தந்த அதிகாரி!
அபராதத்துக்கு தவணை அவகாசம் தந்த அதிகாரி!
அபராதத்துக்கு தவணை அவகாசம் தந்த அதிகாரி!
ADDED : ஜன 03, 2024 03:49 AM

'லோக்சபா தேர்தலுக்கு, 'மாஜி' அமைச்சர்கள் தயாராகிட்டு இருக்காங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''எந்தக் கட்சியில வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சிவகங்கை தொகுதியில, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிட்டா, அவரை எதிர்க்க,அ.தி.மு.க.,வுல மாஜி அமைச்சரும், கவிஞருமான வைகைச்செல்வனை நிறுத்தணும்னு, செட்டியார் சமுதாய சங்கத்தினர் வலியுறுத்தி இருக்காங்க...
''வைகை செல்வனும் செட்டியார் சமூகமா இருக்கிறதால, கடும் போட்டி இருக்கும்னு, அ.தி.மு.க.,வுல இருக்கிற செட்டியார் சமூகத்தினரும் சொல்றாங்க...
''அப்புறமா, முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், தன் மகன் ஜெயவர்த்தனை மறுபடியும் தென்சென்னையில நிறுத்த விரும்புறாரு பா... வளர்மதி, தன் வாரிசை மத்திய சென்னைக்கு தயார்படுத்திட்டு இருக்காங்க...
''வேட்பாளரா அறிவிப்பதற்கு முன்னாடியே, தங்களுக்கே சீட் கிடைக்கும்னு நம்பி, இந்த தொகுதிகள்ல பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கை பணிகளை, மாஜிக்கள் துவங்கிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பதவி உயர்வு, ஊதிய உயர்வு இல்லாம அவதிப்படுறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்....
![]() |
''தமிழக நெடுஞ்சாலைத் துறையில சாலை ஆய்வாளர் முதல், இளநிலை வரை தொழில் அலுவலர் வரை, 104 பணியிடங்கள் காலியா இருக்கு... இதை நிரப்பாம இருக்கிறதால, 2017 முதல், மேற்கண்ட பணியில இருக்கிறவங்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்காம இருக்குதுங்க...
''இதுக்காக, 2022 அக்டோபர்ல அவங்க சென்னையில போராட்டம் நடத்துனாங்க... அதிகாரிகள் பேச்சு நடத்தி, சீக்கிரம் பிரச்னையை தீர்ப்பதா உறுதி குடுத்தாங்க... ஆனா, ஒரு வருஷம் ஆகியும் பிரச்னை தீராததால, 2023 அக்டோபர்ல போராட்டத்துக்கு தயாரானாங்க...
''அப்பவும் அதிகாரிகள் கூப்பிட்டு பேசி, 'ஒரு மாசம் மட்டும் பொறுங்க'ன்னு சொன்னாங்க... அப்புறமா, தலைமை பொறியாளர் கொடுத்த, 'சீனியாரிட்டி லிஸ்ட்' தவறுன்னு அதை நிறுத்தி வச்சுட்டாங்க...
''இதனால, 'துறையின் முதன்மை அலுவலர் சொல்றதை, இரண்டு பெண் அதிகாரிகள் மறுபேச்சு பேசாம ஏத்துக்கிறதால, நாங்க தான் பாதிக்கப்படுறோம்'னு ஊழியர்கள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அதிகாரிகள் நினைச்சா, எதுவும் முடியும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
![]() |
''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டையில இருக்கற கல் குவாரியில, அதிகமா கனிமவளத்தை வெட்டி எடுத்துட்டதா, குவாரி உரிமத்தை 2022ல, கலெக்டர் ரத்து பண்ணிட்டார்... அந்த குவாரி உரிமையாளர், சங்கத்தின் மாநில பொறுப்புல இருக்கார் ஓய்...
''அவர் வெட்டி எடுத்த கற்களுக்கு நியாயமா, 30 கோடிக்கு மேல அபராதம் போட்டிருக்கணும்... ஆனா, துறையின் முக்கிய அதிகாரிக்கு, 2 கோடியை வெட்டி, 10.40 கோடியா அபராதத்தை குறைச்சிட்டார் ஓய்...
''ஆனா, அந்த அபராதத்தை இதுவரைக்கும் உரிமையாளர் கட்டல... ஏன்னா, 2 கோடி வாங்கிய அதிகாரி, அதுலயும் ஒரு சலுகை தந்திருக்கார் ஓய்...
''அதாவது, 'அபராதம் விதிக்கப்பட்ட குவாரியின் உரிம காலமான 2026 வரைக்கும், மாசத்துக்கு 5 லட்சம், 10 லட்சம்னு, 10 கோடி அபராதத்தை 51 தவணையா கட்டுங்கோ'ன்னு, வள்ளல் மாதிரி சலுகை குடுத்திருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.